சாலையை சீரமைத்து தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்





ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ஆவுடையார்கோவிலில் இருந்து குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர், வீரமங்களம், அப்பளை, அரண்மனை, புதுவயல் வழியாக காரைக்குடி வரை செல்லும் குறுக்குவழிசாலை உள்ளது. இந்த சாலையில் எந்த வாகனமும் செல்ல முடியாமல் பழுதடைந்துள்ளது. இந்த சாலை போட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலையாக இருந்தபோது இந்த சாலை போடப்பட்டது. அதன்பிறகு இந்த சாலை நெடுஞ்சாலைத்துறைக்கு கிராம சாலைகள் திட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது.

அதிலிருந்து இந்த சாலை செப்பனிடப்படவில்லை என்றும், இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி குளத்துக்குடியிருப்பு, பெருநாவலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அலுவலகத்தில் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சாலை சீரமைத்து தரப்படும்

இதையடுத்து ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தில்குமரன், நெடுஞ்சாலைத்துறை நபார்டு கிராம சாலை திட்ட உதவிபொறியாளர் வீரமுத்து, ஆவுடையார்கோவில் போலீசார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் தற்சமயம் சாலையில் உள்ள பெரும் பள்ளங்களை சரிசெய்வது என்றும், நெடுஞ்சாலைத்துறையில் மாவட்ட நபார்டு கிராம சாலை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் அந்த சாலையை அரசிடம் இருந்து நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் சீரமைத்து தரப்படும் என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments