மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் விரைவு ரெயிலை மத்திய மந்திரி நேரில் ஆய்வு சென்னை-பெங்களூரு இடையே இயக்க திட்டம்
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் விரைவு ரெயிலையும், அதனை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததையும் படத்தில் காணலாம்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிநவீன வந்தே பாரத் விரைவு ரெயிலை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வந்தே பாரத் ரெயில்

சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் முதல் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரெயில்-18' என்ற அதிநவீன ரெயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் விரைவு ரெயில்' என பெயரிடப்பட்டது.

இந்த ரெயில் டெல்லி-வாரணாசி இடையேயும், டெல்லி-காத்ரா இடையேயும் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதால் கூடுதலாக வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்தது.

அதன்படி சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட உள்ளன.

மத்திய மந்திரி ஆய்வு

தற்போது தயார்நிலையில் உள்ள ஒரு வந்தே பாரத் ரெயிலை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ரெயிலில் உள்ள நவீன அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

சோதனை ஓட்டத்துக்கு பின்பு இந்த ரெயில் இயக்கப்படும் என கூறப்படுகிறது. சென்னை-பெங்களூரு இடையே இந்த ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகம்

இந்த ரெயிலில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:-

16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 1,000 பேர் பயணம் செய்யலாம். இந்த ரெயிலில் இருக்கைகள் புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் சாதாரணமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும். 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் 140 வினாடிகளில் 160 கிலோ மீட்டர் வேகத்தை அடையும். ரெயில் பெட்டிகளில் மின்தடை ஏற்படும்போது தனித்து இயங்கும் வகையில் 4 அவசர கால விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

காற்றில் உள்ள கிருமிகளை அழித்து காற்றை சுத்தம் செய்து பெட்டியின் உள்ளே அனுப்ப புற ஊதா விளக்குகள் இடம்பெற்றுள்ளன. பயணிகள் தகவல்களை அறிய 32 அங்குல திரை வசதி செய்யப்பட்டுள்ளது.

பிரெய்லி எழுத்துகள்

ரெயிலின் இயக்கம், கருவிகளின் செயல்பாடு மற்றும் குளிர்சாதன வசதியை கண்காணிப்பது போன்றவற்றுக்காக கட்டுப்பாட்டு அறையுடன் ஜி.பி.எஸ். வசதி இடம்பெற்றுள்ளது.

ரெயில் வழித்தடத்தில் தண்ணீர் இருந்தால் 400 மில்லி மீட்டர் வரை தாக்கு பிடிக்கும் நீர்காப்பு வசதிக்கு பதிலாக தற்போது 650 மில்லி மீட்டர் வரை தாங்கும் வகையிலான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளன. பார்வையற்ற பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு இருக்கையின் கைப்பிடியிலும் பிரெய்லி எழுத்துகளும் உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments