பிரசித்தி பெற்ற ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ள ஆவுடையார்கோவிலில் சுற்றுலா தலம் அமைக்க திட்டம்




பிரசித்தி பெற்ற ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ள
ஆவுடையார்கோவிலில் சுற்றுலா தலம் அமைக்க திட்டம்


பிரசித்தி பெற்ற ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ள ஆவுடையார்கோவிலில் சுற்றுலா தலம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

ஆத்மநாதசாமி கோவில்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று ஆவுடையார்கோவிலில் அமைந்துள்ள ஆத்மநாதசாமி கோவில் ஆகும். மாணிக்கவாசகரால் இக்கோவில் கட்டப்பட்டது. இங்கு தான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். மூலவராக ஆதி அந்தம் இல்லாத ஆதிசிவன் ஆத்மநாதராகவும், தாயாரான பார்வதி யோகாம்பாளாகவும் காட்சி தருகின்றனர். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், வடிவம் இல்லாமல் தலவிருட்சமான குருந்தமர வடிவில் குடிகொண்டுள்ளார்.

இந்த குருந்தமரம் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே கருவறையில் அமைந்துள்ளது. அதன் மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குவளையை உடலாகவும், அதற்கு உள்ளே இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு உடலுக்குள் இருக்கும் ஆத்மாவை காப்பவராக இந்த ஈசனை ஆத்மநாத ஈஸ்வரன் என்று அழைக்கப்படுவது உண்டு. கோவில் கருவறையில் ஈசன் அரூபமாகவும், அருவுருவமாக குருந்த மர வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகர் ரூபத்திலும் இருக்கின்றனர். பழமையான இக்கோவிலில் வழிபாடு நடத்த ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.

சுற்றுலா தலம்

இந்த நிலையில் ஆவுடையார்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகையை அதிகரிக்க செய்யும் வகையிலும், பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு சுற்றுலா தலம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக கோவில் அருகே அல்லது சற்று தூரத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பூங்கா மற்றும் பொழுதை கழிக்கும் வகையில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்கள் அமரும் வகையில் சுற்றுலா தலம் அமைக்க ஆலோசித்து வருகின்றனர். இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments