புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது எப்போது? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை ரெயில் நிலையம்

புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக தினமும் 14-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் பயணிகள் வருகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி செல்கிறது. இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகளில் இருந்து ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

சரக்கு ரெயில்கள் நிறுத்த தனி தண்டவாள பாதை உள்ளது. ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு தமிழக ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையம் தனியாக இல்லை. காரைக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையம் உள்ளது. முக்கிய நிகழ்வு மற்றும் அவ்வப்போது ஆய்வு பணிக்காக ரெயில்வே பாதுகாப்பு படையினர் வந்து செல்வது உண்டு.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இதுவரை பொருத்தப்படாமல் உள்ளது. ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவது எப்போது? என பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். ரெயில் நிலையத்திற்கு பல தரப்பட்ட மக்கள் வந்து செல்கிற நிலையில் பாதுகாப்பு அம்சத்திற்கு கண்காணிப்பு கேமரா அவசியமாகுகிறது.

இது தொடர்பாக ரெயில்வே வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறுகையில், புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இதுவரை ஒதுக்கப்படவில்லை. மேலும் பொருத்தினாலும் அதனை நிர்வகிக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்க வேண்டும். எனவே தற்போதைக்கு இத்திட்டம் பற்றி எதுவும் இல்லை. காரைக்குடி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின்பு புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் பொருத்தப்பட வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments