திருக்கோவிலூரில் பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை





 
திருக்கோவிலூரில் பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

காதல் திருமணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சையத் ஜிலானி மகன் தஸ்தகீர்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த பி.சி.ஏ. பட்டதாரியான ரிஸ்வான் மகள் அப்சா(வயது 23) என்பவரும் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. அப்சாவை, அவரது கணவர் தஸ்தகீர், மாமனார் சையத் ஜிலானி, மாமியார் ஷிரின், கொழுந்தனார் ரப்பானி, நாத்தனார்கள் கவுசின், ஷாஜிதா மற்றும் ஷாஜிதாவின் கணவர் முஸ்தாக் ஆகியோர் ஒன்று சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 3 மாத பெண் குழந்தையை கொல்ல சொல்லி மிரட்டியுள்ளனா. இதனால் மனமுடைந்த அப்சா, தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.

7 பேர் மீது வழக்கு

இந்த நிலையில் அப்சா விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அப்சாவின் தாய் தவுலத் கொடுத்த புகாரின் பேரில் கணவர் தஸ்தகீர், சையத் ஜிலானி, ஷிரின், ரப்பானி, கவுசின், ஷாஜிதா, முஸ்தாக் ஆகிய 7 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 பக்க கடிதம் சிக்கியது

இதனிடையே அப்சா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், திருமணமான சில நாட்களிலேயே கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். இதனிடையே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொல்ல சொல்லி கணவர் குடும்பத்தினர் மிரட்டினர். பெண் குழந்தையை பெற்றது என் குற்றமா?. என் குழந்தையை கொல்ல விருப்பமில்லை. இந்த உலகில் என் குழந்தை வாழ வேண்டும். நான் சாகிறேன். எனது சாவுக்கு காரணமான கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் விஷம் தின்றபடி(எலி பேஸ்ட்) வீடியோ பதிவிட்டு, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அந்த வீடியோ, 4 பக்க கடிதம் சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments