180 கீலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வந்தே பாரத் ரெயில் தலைநகர் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வருவது எப்போது வலுக்கும் கோரிக்கை




    நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயை தனியார்மயமாக்கும் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. வந்தே பாரத் ரெயில் இந்த நிலையில், கடந்த வருடம் சுதந்திரதினத்தின் போது, 75-வது சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் 75 வந்தேபாரத் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. வந்தே பாரத் எனப்படுவது, ரெயில்-18 என்று பெயரிடப்பட்ட முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்டதாகும். இந்த ரெயில் நாட்டின் அதிவேக ரெயிலாக கருதப்படுகிறது. மினி புல்லட் ரெயில் என்றழைக்கப்படும் இந்த ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தனது முதல் சேவையை தொடங்கியது.

இந்த ரெயில், புதுடெல்லி-வாரணாசி இடையே 760 கி.மீ. தூரத்துக்கு இயக்கப்பட்டது. இந்த ரெயில் காலை 6 மணிக்கு புதுடெல்லியில் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வாரணாசி சென்றடைகிறது. இந்த ரெயில் கான்பூர், அலகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் வாரணாசியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுடெல்லி வந்தடைகிறது. ஆனால் இந்த ரெயிலின் சராசரி வேகம் மணிக்கு வெறும் 95 கி.மீ. மட்டுமே ஆகும். மற்றொரு ரெயில் புதுடெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீமாதா வைஷ்ணவா தேவி கத்ரா ரெயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தனது முதல் பயணத்தை தொடங்கியது.

அதன்படி, புதுடெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 2 மணிக்கு கத்ரா சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கத்ராவில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு புதுடெல்லி ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில், அம்பாலா காண்ட், லூதியானா மற்றும் ஜம்முதாவி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். ஆனால், இந்த ரெயில் மணிக்கு 82 கி.மீ. வேகத்தில் மட்டும் இயக்கப்பட்டு 655 கி.மீ தூரத்தை சுமார் 8 மணி நேரத்தில் கடக்கிறது.

அதேபோல, தென்னக ரெயில்வேயில் இயக்கப்படும் வந்தேபாரத் ரெயிலை சென்னையில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை தென்மாவட்டங்கள் அனைத்தும் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

ஏற்கனவே, தென்மாவட்டங்களை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ராஜதானி, சதாப்தி, டபுள் டக்கர், ஜனசதாப்தி உள்ளிட்ட அதிவேக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மதுரை-சென்னை இடையே தேஜஸ் ரெயில் மட்டும் இயக்கப்படுகிறது. இதில் மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட பயணிகளுக்கு எந்த பலனும் இல்லாமல் உள்ளது.

எனவே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் வந்தேபாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் தமிழக ரெயில் பயணிகளிடையே பெரும் எதிர்பார்பபை பெற்றுள்ளது.

வந்தே பாரத் ரெயில் பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றான ஐ.சி.எப். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ளது. எனவே, இங்கு தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தமிழக பயணிகள் சேவைக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. ஆனால், தற்போது வரை தமிழகத்தில் வந்தேபாரத் ரெயில் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இதற்கு பெட்டிகள் தயாரிப்பில் ஏற்படும் காலதாமதம்தான் காரணம் என கூறப்படுகிறது.

காலதாமதம் குறித்து ஆராய, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலைக்கு வந்திருந்தார். இது அவரது 2-வது ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை ஒரேயொரு வந்தே பாரத் ரெயிலுக்கான 16 பெட்டிகள் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவித்த படி ரெயில்கள் இயக்க சுமார் 1,110 பெட்டிகள் தேவைப்படுகிறது. இதனை தயாரிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பாக தமிழக ரெயில் பயணிகளிடையே இந்த விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரெயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம் ஆண்டுக்கு எத்தனை பெட்டிகள் தயாரிக்க முடியும் என்பது குறித்த திட்ட அறிக்கை பெறாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டதா அல்லது அதிகாரிகள் வழக்கம் போல, தவறான தகவல்களை ரெயில்வே அமைச்சகத்துக்கு கொடுத்தனரா என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டில் 400 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பழைய பெட்டிகளை மாற்றிவிட்டு, எல்.எச்.பி. வகை பெட்டிகளை நாட்டில் உள்ள 3 ரெயில் பெட்டி தொழிற்சாலைகளும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பட்ஜெட் அறிவிப்பு படி வந்தேபாரத் ரெயில் பெட்டிகளை தயாரிப்பது சாத்தியமா? என தெரியவில்லை.

இதுபோன்ற நடைமுறை சிக்கல்களால் தென்மாவட்ட பயணிகளுக்கு வந்தே பாரத் வந்து சேருமா? என்பதை பொறுத்திருந்த பார்க்க வேண்டும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சாதனை

இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சாதனை பதிவு செய்துள்ளது. ஜபல்பூர், இந்தியாவின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன அம்சங்களுடன் மற்றும் சிறப்பு வசதிகளுடன், அதிவேகத்தில் செல்ல கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் தானியங்கி கதவுகள், குளிரூட்டப்பட்ட சேர் கார் வசதிகளுடன் கூடிய ரெயில் பெட்டிகள் உள்ளன. 

180 டிகிரி அளவுக்கு சுழல கூடிய திறன் படைத்த சுழலும் நாற்காலியானது ரெயிலில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரெயிலானது சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் சென்று சாதனை பதிவு செய்துள்ளது. இதுபற்றி மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வனி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கோட்டா-நாக்டா பகுதிகளுக்கு இடையே வந்தே பாரத்-2 எக்ஸ்பிரஸ் ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியது. அது மணிக்கு 120, 130, 150 என கடந்து 180 கி.மீ. வேகத்தில் பயணித்து உள்ளது என தெரிவித்து உள்ளார். முதல்கட்ட ஆய்வின்போது, வந்தே பாரத் ரெயிலானது, நீரால் தூய்மை செய்யப்பட்டது. இதுதவிர்த்து, ரெயிலின் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. பல்வேறு வேக மட்டத்தின் அடிப்படையில் கோட்டா மற்றும் நாக்டா ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. 

ரெயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, இணைக்கப்பட்ட ரெயில் பெட்டிகளின் அசைவுகளும் பரிசோதனை செய்யப்பட்டன. இதற்காக ஆர்.எஸ்.டி.ஓ. (ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிர்ணயம்) அமைப்பின் குழு ஒன்று பணியில் ஈடுபட்டது. இந்த பகுதிகளில் 6 கட்டங்களாக நடந்த அடுத்தடுத்த சோதனை ஓட்டத்தில் ரெயிலானது பல இடங்களில் மணிக்கு 180 கி.மீ. வேகம் எட்டி சாதனை பதிவு செய்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments