சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்



வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது. சிறு குலுங்கல் கூட இல்லாமல் ரயில் சென்றதால், தண்ணீர் நிரப்பப் பட்டிருந்த கிளாஸில் இருந்து ஒரு சொட்டு கூட கீழே சிந்தவில்லை. அந்த அளவுக்கு இதன் பயணம் சொகுசாக உள்ளது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேகரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்தரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன.

இதன் சேவைகள் டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கி யது. டெல்லி - ஜம்மு வைஷ்ணவ் தேவி வழித்தடத்திலும் வந்தே பாரத் எக்பிரஸ் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வேகம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானின் கோட்டா என்ற இடத்திலிருந்து மத்திய பிரதேசத்தின் நக்டா என்ற இடம் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த வெள்ளிக் கிழமை மணிக்கு 120 கி.மீ முதல் 183 கி.மீ வரை இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆனாலும், ரயில் பயணத்தில் எந்த குலுங்கலும் இல்லை.


ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் வெளியிட்ட ட்விட்டர்பதிவில், ஸ்பீடோமீட்டர் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன்படத்தையும், அருகில் தண்ணீர் நிரம்பிய ஒரு கிளாஸ் இருக்கும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். ரயில் 183 கி.மீ வேகத்தில் செல்லும் போதும், ஒரு சொட்டு தண்ணீர் கூட கீழே சிந்தவில்லை. ‘உயர்தரமான பயணம், தண்ணீர் கிளாஸை பாருங்கள்’ என அமைச்சர் வைஷ்ணவ் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments