புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் சட்டவிரோதமாக கருதி நடவடிக்கை! மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.!!



புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கவுதீன், கடந்த 2019-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் முறையான அனுமதி இன்றி மரங்களை வெட்டுகின்றனர். இந்த மரங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர்.

எனவே அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி சந்திரசேகரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புயல் ஏற்பட்டதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றையும், மின் கம்பங்களின் மீது சாய்ந்த மரங்களையும் அந்தந்த கிராமத்தினர் அகற்றினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி யாரும் மரங்களை வெட்டவில்லை. சட்டவிரோதமாக மரத்தை வெட்டியவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

விசாரணை முடிவில், இனிவரும் காலங்களிலும் உரிய அனுமதியின்றி மரங்களை வெட்ட அனுமதிக்கக்கூடாது. மீறும்பட்சத்தில் அதை சட்டவிரோதமாக கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments