விதிமுறைகளை மீறி செயல்படும் உர விற்பனை நிலையங்களுக்கு தடை - அதிகாரி எச்சரிக்கை.!!விதிமுறைகளை மீறி செயல்படும் உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்படும் என அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் நெல், மக்காச்சோளம், கரும்பு, நிலக்கடலை, உளுந்து மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் விற்பனை துறை ஆகியோர் கொண்ட சிறப்பு குழுவினரால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ஐ சரியாக பின்பற்றாத 2 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தற்காலிகமாக விற்பனை தடை விதித்து உத்தரவிடப்பட்டு, முறையாக பின்பற்றப்படாமைக்கான விளக்கம் கோரப்பட்டுள்ளது. எனவே, சில்லறை உர விற்பனையாளர்கள் உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து வழங்கக்கூடாது. 

விவசாயிகள் இது குறித்து ஏதேனும் புகார் தெரிவிக்க தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட உரக்கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மொத்த உர விற்பனையாளர்கள் பிற மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிடவும், பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்வதும் கூடாது. உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் இருப்பு வைக்கக்கூடாது. இதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments