மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை



மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். கடந்த கொரோனா கால விடுமுறையின் போது வீட்டில் இருந்து வந்தார். அப்போது கூலித்தொழிலாளியான 43 வயதுடைய அவரது தந்தை மதுபோதையில், வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தனது மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தொடர்ந்து அவர் இதுபோல் மிரட்டி தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதில் அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுமி கர்ப்பமடைந்தது குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தனர். இதில் அவர் தன்னை கர்ப்பமாக்கியது உறவினர் ஒருவர் என கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது மாற்றுத்திறனாளியான அவர் தனக்கு இதில் தொடர்பு இல்லை என தெரிவித்துவிட்டார்.

இதனால் போலீசார் சிறுமியிடம் துருவி, துருவி விசாரித்த போது, கர்ப்பத்திற்கு காரணம் தனது தந்தை தான் எனவும், இதனை வெளியில் சொல்லக்கூடாது என அவர் மிரட்டியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் 7-ந் தேதி டவுன் அனைத்து மகளிர் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், பொய் தகவல் கூறி சிறுமியை பொய்யாக வாக்குமூலம் கொடுக்க வைத்ததற்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்டவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர். நீதிபதி தீர்ப்பால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments