கீரமங்கலத்தில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு: இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு சீர்கொண்டு சென்ற இஸ்லாமியர்கள்




புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள பட்டவைய்யனார் கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து இன்று (திங்கட்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 5 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இதில் அமைச்சர் மெய்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று மாலை கீரமங்கலம் மேற்கு முஸ்லிம் பேட்டை ஜமாத்தார்கள் பள்ளிவாசலில் இருந்து காய், கனி, பட்டு உள்ளிட்ட ஏராளமான தட்டுகளுடன் நாட்டிய குதிரைகளின் ஆட்டம், மேள தாளம், வாண வேடிக்கைகளுடன் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சீர்வரிசை கொண்டு வந்தனர். கோவில் வளாகத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து சந்தனம், கற்கண்டு கொடுத்து வரவேற்றனர். இதேபோன்று காசிம்புதுப்பேட்டை ஜமாத்திலிருந்தும் சீர்வரிசை கொண்டு வந்தனர். கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் சீர்வரிசைகள் கொண்டு வந்தனர்.

இதேபோல் பொன்னமராவதி அருகே கேசராபட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், கேசராபட்டியை ேசர்ந்த இந்துக்கள் பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்து சென்றனர். அவர்களை இஸ்லாமியர்கள் வரவேற்று அழைத்து சென்றனர். இந்து கோவில் கும்பாபிஷேகத்திற்கு முஸ்லிம்கள் சீர்வரிசை கொண்டு சென்றது போல் பள்ளிவாசலுக்கு இ்ந்துக்கள் சீர்வரிசை கொண்டு சென்ற நிகழ்வு மதநல்லிணக்கத்தை வலுப்படுத்துவதாக இருந்தது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments