விபத்தில் இறந்த சகோதரன்; துக்கத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட சகோதரி! நெஞ்சை உருக்கும் சம்பவம்




தன் சகோதரனும் அவரது நண்பனும் ஒரு விபத்தில் பலியான தகவல் கேட்டு அடுத்த சில மணி நேரத்திற்குள் சகோதரி தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் நெஞ்சை உருக்கும் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது. இது எங்கே நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள கம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜகுரு மற்றும் தனியார் பேருந்து நடத்துநர் ராமு என்கிற ராமநாதன். ராமுவுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், நண்பர்களான இருவரும் நாகுடியிலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே திருச்சி பூச்சியியல் துறை வல்லுநர் லதா மற்றும் துறை அலுவலர்கள் 5 பேர் அறந்தாங்கி, நாகுடி வழியாக மணமேல்குடி நோக்கிச் சென்றுள்ளனர். 

இவரகள், சுகாதாரத்துறைக்கு சொந்தமான காரில் பயணித்தனர். அந்த காரை குளித்தலை சஞ்சீவி (50) என்பவர் ஓட்டியுள்ளார். நாகுடி கலக்குடி தோப்பு அருகே அரசு கார் நிலை தடுமாறி ஓடியுள்ளது. அந்த கார், எதிரில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜகுரு - ராமநாதன் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாகுடி போலீசார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஓட்டுநர் குளித்தலை சஞ்சீவியை கைது செய்தனர்.

இந்தத் தகவல் வேகமாக பரவியதால் இளைஞர்களின் உறவினர்கள், சுகாதாரத்துறை கார் மோதி பலியான இளைஞர்களின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து நாகுடியில் கொட்டும் மழையில் சுமார் 2 மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.

இந்த தகவல் கம்பச்சேரி கிராமத்திலிருந்த ராமநாதனின் சித்தப்பா பாலன் (எ) பாலகிருஷ்ணன் மகள் ராக்கம்மாளுக்கு தெரியவர பேரதிர்ச்சியடைந்த அவர், ஒரே நேரத்தில் தன் சகோதரனையும் அவனது நண்பனையும் பறிகொடுத்துவிட்டாமே என்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். இவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராக்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் சகோதரனும் அவனது நண்பனும் ஒரே நேரத்தில் ஒரே விபத்தில் பலியான தகவல் அறிந்து அவர்கள் மீது அதிக பாசம் வைத்திருந்த ராக்கம்மாள் இனியும் வாழ வேண்டுமா என்று விஷம் குடித்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார். இரு இளைஞர்களையும், ஒரு இளம் பெண்ணையும் ஒரே நாளில் பறிகொடுத்துவிட்டு கதறிக் கொண்டிருக்கிறது கம்பச்சேரி கிராமம். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments