தமிழகம் முழுவதும் தொடர்ந்து 3 மாதங்கள் பொருள் வாங்காத 13 லட்சம் குடும்ப அட்டை தகுதி நீக்கமா?
            தமிழகம் முழுவதும் கடந்த 3 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத 13,11,716 குடும்ப அட்டைகள் குறித்து விசாரிக்க உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 60 லட்சம் குடும்ப அட்டைகள் ஆதார் எண் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டு மொபைல் போன் எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதனால், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ளோரில் யாரேனும் ஒருவர் வராமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி குடும்ப அட்டைகள் ஒரளவு ஒழிக்கப்பட்டன.

2016-ம் ஆண்டு கணினி மயமாக்கப் பணிக்கு முன் மதுரை மாவட்டத்தில் 9,47,177 குடும்ப அட்டைகள் இருந்தன. அதன்பிறகு 8,38,393 அட்டைகளாகக் குறைந்தன. மீதமுள்ளவை போலியாக கருதி தகுதி நீக்கம் செய்யப்பட்டன. அதன்பின் புதிய குடும்ப அட்டைகள் பெற்றவர்களையும் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 9,00,055 குடும்ப அட்டைகள் உள்ளன.

குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு அத்தியாவசியப் பொருட்கள், பொங்கல் பரிசு மட்டுமில்லாது தற்போது அரசு அறிவிக்கும் பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகின்றன. அதனால், குடும்ப அட்டை எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், சமீப காலமாக குறிப்பிட்ட சதவீத குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வாங்கப்படாமலேயே உள்ளதாக தகவல்கள் வந்தன. அதனால், அந்தக் குடும்பஅட்டைகள் போலிகளா? என விசாரிக்க தமிழ்நாடு உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தற்போது கடைசி 3 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைகள் விவரத்தை ரேஷன் கடை ஊழியர்கள் சேகரிக்கின்றனர். அந்தக் குடும்ப அட்டைதாரர்களை மொபைல் போனில் அழைத்து எதற்காகப் பொருட்கள் வாங்கவில்லை என்ற காரணங்களைக் கேட்டு அதனைப் பதிவு செய்து மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் 13,11,716 குடும்ப அட்டைகளுக்கு அண்மைக் காலமாகப் பொருட்கள் வாங்கப்படவில்லை. இந்த அட்டைகளின் விவரங்களைப் பற்றித்தான் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்டையில் தமிழகத்தில் 13,11,716 கார்டுகளை விசாரிக்கிறோம். போலி குடும்ப அட்டைகளாக இருக்கலாமா? அந்த அட்டைகள் உள்ள குடும்பத் தலைவர் இறந்திருக்கலாமா? அல்லது வேறு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்திருக்கலாமா? என்று விசாரிக்கிறோம். உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதற்காக விசாரிக்கப்படவில்லை. பலகட்ட விசாரணை, வாய்ப்புகளுக்குப் பிறகே அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments