புதுக்கோட்டையில் பரபரப்பு: கல்லூரி மாணவர் தாயுடன் வங்கி முன்பு தர்ணா கல்வி பாதிக்கப்பட்டதால் அதிருப்தி
        புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் இருதயமேரி. இவரது மகன் பாலிக்அமல்ராஜ். இவர், கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில், பாலிக் அமல்ராஜூக்கு கல்விக்கடன் வழங்குமாறு புதுக்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதயமேரி விண்ணப்பித்து இருந்தார்.
இதனை பரிசீலனை செய்த வங்கி நிர்வாகம் கல்விக்கடன் தருவதாக கூறி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கடன் தர முடியாது என கூறிவிட்டனர். ஆனால், விண்ணப்பத்தை இணையதளத்தில் இருந்து வங்கி நிர்வாகம் நீக்காமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. வேறு வங்கியில் கல்வி கடன் பெற முயற்சித்தபோது முந்தைய வங்கியில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள தங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் இருந்து நீக்கினால்தான் கடன் தர இயலுமென வங்கி அலுவலர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தங்களது விண்ணப்பத்தை ஆன்லைனில் இருந்து நீக்குமாறு கடந்த 4 மாதங்களாக இருதயமேரி வலியுறுத்தி வந்தும் வங்கி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் கல்லூரிக்கட்டணத்தை செலுத்தாததால் நிர்வாகம் பாலிக்அமல்ராஜை கல்லூரியை விட்டு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. கல்வி பாதிக்கும் வகையில் நடந்துகொண்ட வங்கி நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி மாணவர் தனது தாயுடன் புதுக்கோட்டை வங்கிக்கிளை முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு, ஆன்லைனில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த கல்விக்கடன் விண்ணப்பத்தை நீக்குவதாக வங்கி அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வங்கி அதிகாரிகள் மாணவர்களின் விண்ணப்பத்தை உரிய முறையில் பரிசீலனை செய்து கல்வி கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments