புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் இரவு நேர சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து போராட்டம் ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு




புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் இரவு நேர சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்த ஊழியர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேவை நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுபாஷ் சந்திரபோஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 7-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்சுகள் இரவில் இயக்கப்படாமல் இருப்பது, ஊழியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியாக செயல்படுவதை கண்டித்து அமைப்பு ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பது. 108 ஆம்புலன்ஸ்களுக்கு மைலேஜ் கொடுக்க வேண்டும் என தொழிலாளர்களை மிரட்டுவது, பணியிடத்தை மாற்றுவது என டிரைவர்களுக்கு மனரீதியான உளவியல் பிரச்சினைகளை உண்டாக்கும் அதிகாரிகளை கண்டிப்பது. 2022-ம் ஆண்டுக்கான சம்பள உயர்வை மேலும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்க வேண்டும், தொழிலாளர் தொழிற்சங்க பழிவாங்கும் விரோத போக்கை கைவிட வேண்டும், தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் 108 ஆம்புலன்சுகளை முழுமையாக இயக்க வலியுறுத்தி வரும் 15-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பங்கேற்பது.

போராட்டம் நடத்த முடிவு

காரையூர், பரம்பூர், ராஜநாயக்கன்பட்டி, மழையூர், வாராப்பூர் புனல்குளம், வல்லத்திரகோட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் ஆம்புலன்சுகள் இயக்கப்படாமல் சேவை விரோத செயலில் ஈடுபடும் நிர்வாக அதிகாரிகளை கண்டிப்பதுடன், இப்பகுதியில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் இயங்க வலியுறுத்தியும் அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் தலைமை மருத்துவமனைக்கு புதிதாக ஆம்புலன்ஸை கொண்டுவர வேண்டும் எனவும், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டியின் மூலமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை அணிதிரட்டி அமைப்பு ரீதியான போராட்டங்களையும், சட்டரீதியான போராட்டங்களையும் மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வீரமுத்து, மதுரை மண்டல பொருளாளர் பாஸ்கரன், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் மற்றும் நல்லுறவு கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments