பச்சை நிறமாக மாறிய பாம்பன் கடல் மீன்கள் ஆழ்கடலுக்கு இடம் பெயர்ந்ததா?
பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பச்சை நிறமாக கடல் மாறியது. இதனால் மீன்கள் ஆழ்கடலுக்கு இடம்பெயர்ந்து இருக்கலாம் என விஞ்ஞானி தெரிவித்தார்.

21 தீவுகள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் அருகே உள்ள சிங்கிலித்தீவு முதல் தூத்துக்குடி வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன.

இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் ஆமை, கடல் பசு, டால்பின், நட்சத்திர மீன்கள், பவளப்பாறைகள், கடல் குதிரை உள்ளிட்ட 3,600-க்கும் மேற்பட்ட அரிய வகையான கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், .ராமேசுவரம் அருகே பாம்பன் தென்கடல் மற்றும் ெரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் கடல்நீர் திடீரென பச்சை நிறமாக மாறி நேற்று முதல் காட்சி அளிக்கிறது.

இதை பாம்பன் பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று வேடிக்கை பார்த்ததுடன், தங்கள் செல்போன்களிலும் படம் பிடித்தனர். மேலும் அலைகளின் காட்சியும் பசுமையாகவே காணப்பட்டன.

இதேபோல் மண்டபம் கடற்கரை பூங்காவை ஒட்டிய தென்கடல் பகுதியிலும் கடல் நீரானது பச்சை நிறமாகவே மாறி இருந்தது.

இது பற்றி மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி தமிழ்மணி கூறியதாவது:-

ஆண்டுதோறும் இந்த சீசனில் இதுபோன்று நடப்பது வழக்கம். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, நல்ல தண்ணீர் அதிக அளவில் கடலில் கலந்து உள்ளதால் இந்த மாற்றம் நிகழும்.

மேலும் கடலுக்குள் இயற்கையாகவே நாட்டிலூக்கா என்று சொல்லக்கூடிய கண்ணுக்கு தெரி்யாத ஒரு வகையான பச்சை பாசி கடலில் படர்ந்துள்ளது.

ஆழ்கடலுக்கு இடம்பெயர்ந்தன

ஆழ்கடல் பகுதியில் காணப்படும் இந்த பாசிகள், அலையால் கரை வரைவந்து படர்ந்துள்ளன. இதனாலும் கடலின் நிறம் மாறி இருக்கிறது.

பச்சை பாசிகள் அதிகம் படர்ந்துள்ள பகுதிகளில் மீன்கள் சுவாசிக்க தேவையான ஆக்சிஜன் கிடைக்காது என்பதால் கரையோரத்தில் உள்ள பெரும்பாலான மீன்கள் ஆழ்கடல் பகுதியை நோக்கி நீந்தி இடம் பெயர்ந்து விடும். சிறிய வகையான மீன்கள் சுவாசிக்க முடியாமல் இறப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

மீனவர்கள் பயப்பட தேவையில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் அலையின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தானாகவே இந்த பாசிகள் கரை ஒதுங்கி அழிந்து விடும். மன்னார் வளைகுடா மட்டுமின்றி, பாக்ஜலசந்தி பகுதியிலும் ஒரு சில இடங்களில் இந்த பச்சை பாசிகள் கடலில் படர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments