உசிலம்பட்டி திருமனவிழாவில் ருசிகரம்: கிரிக்கெட் விளையாட அனுமதிக்க நண்பனின் மனைவியுடன் ஒப்பந்தம்
உசிலம்பட்டி விழாவில் ருசிகரம்: மணமகனின் நண்பர்கள் மணமேடையில் புதுப்பெண்ணிடம் கையெழுத்துவாங்கி திருமணத்திற்கு பின்னரும் நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்.

மணமகனின் நண்பர்கள் மணமேடையில் பத்திரத்தில் புதுப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கி, திருமணத்துக்கு பின்னரும் நண்பனை கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

பள்ளி, கல்லூரி பருவங்களில் நண்பனின் வீட்டுக்கு சென்று ’டேய் மச்சான்’ வாடா கிரிக்கெட் ஆட போலாம். ஊர் சுற்றலாம். கோவில் விழாவுக்கு போவோம். சினிமாவுக்கு செல்வோம் என உரிமையோடு அழைப்பார்கள்.

நண்பனின் வீட்டு் சமையல் அறை வரை சென்று அங்கு உணவு பதார்த்தங்களை எடுத்து உரிமையோடு கடிப்பவர்களும் உண்டு.

இதுபோன்ற நட்பு அந்த நண்பனுக்கு திருமணமாகும் வரைதான் பெரும்பாலும் நீடிக்கிறது. மணமாகிவிட்டால், நினைக்கும் நேரத்தில் முன்புபோல் நண்பனை வெளியே அழைப்பது நின்றுவிடும். அப்படியே அழைத்தாலும், அந்த நண்பன் தன் கண் ஜாடையில் மனைவியிடம் அனுமதி வாங்கிவிட்டுத்தான் வீட்டைவிட்டு வெளியில் வருவதையும் அறிந்திருப்போம்.

இதுபோன்ற நிலை நீடித்தால் “உனக்கு நண்பன் பெரிதா, மனைவி பெரிதா?” என புதுப்பெண் கடிந்து கொள்வதையும் கேள்விப்பட்டு இருப்போம். இதுபோன்ற காரணங்காலேயே பெரும்பாலானவர்களின் நட்பு திருமணம் என்ற எல்லைக்கோட்டுடன் நிறைவு பெற்று, எப்போதாவது எதிர் எதிரே சந்தித்தால் நலம் விசாரிப்பதுடன் முடிந்து போய்விடுகிறது.

ஆனால், அப்படி ஒரு நிலை தங்கள் நட்புக்கு வந்துவிடக்கூடாது என்று புதுப்பெண்ணுடன் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள், மாப்பிள்ளையின் நண்பர்கள். அந்த சுவாரசியத்தை இங்கே காணலாம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத்.(வயது 24) இவர் தேனியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதோடு இவர் சிறந்த கிரிக்கெட் வீரரும் கூட. தங்கள் பகுதியில் உள்ள சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கும், தேனியைச் சேர்ந்த பூஜா(22) என்ற பெண்ணுக்கும் உசிலம்பட்டியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மணமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.

இந்த நிலையில் மணமகனின் நண்பர்கள் சிலர் 20 ரூபாய் முத்திரைத்தாள் அடங்கிய பத்திரத்துடன் மணமேடைக்கு வந்தனர். திடீரென்று அந்த பத்திரத்தை மணமகளிடம் ெகாடுத்து, “தங்கள் நண்பரை திருமணத்திற்கு பின்னரும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டு கொண்டனர்.

இதுசம்பந்தமான ஒப்பந்தத்துக்குத்தான் பத்திரத்துடன் வந்து இருக்கிறோம் என கூறியதும் மணமகள் ஆச்சரியம் அடைந்து சிரித்தார்.

பின்னர் அதில் உள்ளவற்றை படித்து பார்த்த மணமகள், “நீங்கள் எனது கணவரை கிரிக்கெட் விளையாட அழைத்து செல்லலாம்” என்று கூறி விட்டு அந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தார்்.

அந்த பத்திரத்தில், திருமணத்துக்கு பின்னரும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மணமகன் கிரிக்கெட் விளையாட மணமகள் சம்மதம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பின்னர் அந்த பத்திரத்துடன் மணமக்களுடன் நண்பர்கள் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புதுப்பெண், புகுந்த வீட்டுக்கு செல்லும்போது புது உறவுகளுடன் பழக சற்று நாள் பிடிக்கும். அதுவரை கணவன்தான் தனக்கு உற்ற துணை என்ற எதிர்பார்ப்பு அவரிடம் இருக்கும். இதனால் சில கெடுபிடிகள் வரத்தான் செய்யும். மணமகனுக்கோ அந்த கெடுபிடிகளை தளர்த்தி நண்பர்களுடன் முன்புபோல் பழகுவது முடியாமல் போவதால் நட்பு முறிகிறது. எனவே நண்பர்களிடமும, மனைவியிடமும் தன் நிலைமையை மாப்பிள்ளை எடுத்துச்சொல்லி புரியவைத்தால் இல்லறமும் சிறக்கும். நட்பும் உயிர்ப்புடன் இருக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments