புதுக்கோட்டையில் தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரூ.33 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.





புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, குட்கா விற்பனை போன்றவற்றை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து பழனிவேல் (வயது 45) என்பவர் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். இதில் புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்த முகமது கனி (36) என்பவரிடம் இருந்து புகையிலை பொருட்களை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து முகமது கனியை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் புகையிலை பொருட்களை திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்யும் டீலர் போல செயல்பட்டது தெரிந்தது. மேலும் அவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வந்தனர். மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள 1,139 கிலோ புகையிலை பொருட்களை (குட்கா) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய முகமது கனி காரையும் கைப்பற்றினர். இதையடுத்து பழனிவேல், முகமது கனி ஆகியோரையும், பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments