ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாகன ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் வாகன ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் பொதுமக்கள் சிலர் தவித்து வருகின்றனர்.

ஓட்டுனர் பயிற்சி

தமிழகத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுனர் பயிற்சி பெற்று அவர்கள் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பதிவு செய்யப்படுவது உண்டு. இதேபோல பொதுமக்கள் சிலர் நேரிடையாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வது உண்டு. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இதற்காக பிரத்யேக விதிமுறைகள் உள்ளன. இதனை கடைப்பிடித்து அதில் நன்றாக வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் ஓட்டுனர் உரிமம், உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், மற்ற நாட்களில் சாதாரண பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலக உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவினை எதிர்த்து கடந்த 12-ந் தேதி முதல் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.

வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்

மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகம் புதுக்கோட்டையிலும், அறந்தாங்கி, ஆலங்குடி, இலப்பூரில் பகுதி அலுவலகமும் இயங்கி வருகிறது. ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தினால் அவர்களிடம் பயிற்சி பெற்று ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தவர்கள், உரிமம் புதுப்பிக்க விண்ணப்பித்தவர்கள் உரிய உரிமம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தமானது நேற்று 3-வது நாளாக நீடித்தது. தொடர்ந்து நீடிக்கும் என அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக ஓட்டுனர் உரிமம் மட்டும் இல்லாமல் அவர்கள் மூலம் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டியதை பெற முடியாமல் பொதுமக்கள் சிலர் தவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments