தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசு பள்ளிகளில் ஒன்று கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

    கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மகளிர் மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 23 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறினார்கள். அனைவரையும் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த அரசுப் பள்ளிகளில் ஒன்று கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளி என்று கூறலாம். அனைவரும் மருத்துவராக வேண்டும் என்பதில்லை. ஆனால் கல்வியால் நல்ல மனிதர்களாக முடியும். விலையில்லா சைக்கிள் கொடுப்பது நீங்கள் பள்ளிக்கு வருவதற்காக மட்டுமல்ல உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் கவனத்தில் கொண்டே வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் பதவிகளில் பெண்கள் இருக்கிறார்கள் என்பது பெருமையாக உள்ளது. இதற்கு காரணம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரே. அந்த வழியில் வந்த மு.க.ஸ்டாலின் தற்போது பள்ளிக் கல்விக்காக மட்டும் ரூ.36 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார் என்றார்.

     மேலும் கீரமங்கலம் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் பள்ளி செல்லா குழந்தைகளை கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு அழைத்து வந்துள்ளதை பாராட்டுகிறேன். மேலும் அறிவொளி நகர் நரிக்குறவர் காலனி மக்கள் தங்களுக்கான சாதிச்சான்றிதழை எஸ்.டி. என தர வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனு உடனடியாக முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments