மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில்தான் கலந்தாய்வு நடக்கும் என்று மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.




எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவு கடந்த 7-ந் தேதி வெளியான நிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்? கலந்தாய்வு ஆன்லைனிலா? ஆப்லைனிலா? என்பது மாணவ-மாணவிகள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்குவதில் தாமதம் ஏன் என்பது குறித்து மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை, தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் மதிப்பெண் பட்டியலை இன்னும் எங்களுக்கு அனுப்பவில்லை. அவர்கள் அனுப்பியதும், விண்ணப்ப பதிவு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்' என்றனர்.

கடந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடந்தது. அதாவது, சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடுகளுக்கு மட்டும் ஆப்லைனில் கலந்தாய்வு நடந்தது. அதேபோலதான் இந்த ஆண்டும் கலந்தாய்வு நடைபெறுமா அல்லது அதற்கு முந்தைய ஆண்டுகளில் அனைத்து கலந்தாய்வும் ஆப்லைனில் நடத்தப்பட்டது போல திட்டமிடப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவந்தது.

ஆன்லைனில்தான் கலந்தாய்வு

இதுதொடர்பாக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு மிகவும் குறைந்த கால அளவே இருக்கிறது. அதனால் ஆப்லைனில் கலந்தாய்வு என்பது சாத்தியம் இல்லை. பெரும்பாலும் ஆன்லைனில்தான் கலந்தாய்வு நடக்கும். கடந்த ஆண்டு நடத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு அதிகம்' என்றனர்.

இந்த ஆண்டு கலந்தாய்வில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவிடம் செலுத்திவிட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டுசென்றால் போதும், கல்விக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்.

மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த டாக்டர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றதாகவும், இடமாறுதல் பெற்றவர்களில் 90 முதல் 95 சதவீதம் பேர் அந்தந்த பணியிடங்களில் சேர்ந்துவிட்டதாகவும், அவர்களின் முழுவிவரங்கள் மருத்துவ கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்தார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை இடங்கள்?

நடப்பு ஆண்டில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள், 20 தனியார் சுயநிதி கல்லூரிகள், 2 அரசு பி.டி.எஸ். கல்லூரிகள், 20 தனியார் சுயநிதி பி.டி.எஸ். கல்லூரிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 385 இடங்கள் வருகின்றன. இதில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 8 ஆயிரத்து 225 இடங்களும், பி.டி.எஸ். படிப்பில் 2 ஆயிரத்து 160 இடங்களும் இருக்கின்றன. இந்த இடங்களுக்குத்தான் விண்ணப்பப் பதிவை தொடங்கி,கலந்தாய்வை விரைவில் நடத்துவதற்கு மருத்துவகல்வி இயக்ககம் தயாராக உள்ளது.

இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒ துக்கீட்டின் கீழ் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இடங்கள் ஒதுக்கப் பட்டு வருகின்றன. அந்த வகையில் 2020-ம் ஆண்டு கலந்தாய்வில் 336 எம்.பி.பி.எஸ்., 97 பி.டி.எஸ். என மொத்தம் 433 இடங்களும், 2021-ம் ஆண்டில் 445 எம்.பி.பி.எஸ்., 109 பி.டி.எஸ். என மொத்தம் 554 இடங்களும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைத்தன. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் (2022) நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 ஆயிரத்து 447 அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்பது குறித்த தகவலை மருத்துவ கல்வி இயக்ககம் நேற்று தெரிவித்தது. அதன்படி, அரசு மருத்துவ கல்லூரிகளில் 325 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 130 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பி.டி.எஸ். கல்லூரிகளில் 13 இடங்களும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் 101 இடங்களும் என மொத்தம் 569 இடங்கள் கிடைக்கும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட 15 இடங்கள் கூடுதலாக இந்த ஆண்டு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments