சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு




சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும் மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வைகோ வழக்கு

சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் சீமை கருவேல மரங்களை தமிழ்நாடு முழுவதும் அகற்றுவது தொடர்பாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம், தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதி கொண்டு முழு அமர்வு விசாரித்து வந்தது. பின்னர், இந்த வழக்குகளை, வன பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சுக்கு மாற்றி, தலைமை நீதிபதி தலைமையிலான முழு அமர்வு உத்தரவிட்டது.

இதன்படி, இந்த வழக்கு சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

படிப்படியாக அகற்றம்

அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை, நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், முதுமலை, ஆனைமலை வனப்பகுதிகளில் 200 ஹெக்டேர் பரப்பில் வளர்ந்திருந்த சீமை கருவேலமரங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டு இருந்தது.

நீர்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் 1.93 லட்சம் ஹெக்டேர் பரப்பு நீர் நிலைகளில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவற்றில் 70 ஆயிரத்து 294 ஹெக்டேர் பரப்பில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள மரங்கள் படிப்படியாக அகற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏலம் மூலம் விற்பனை

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘கிராமப்புறங்களில் 2 ஆயிரத்து 700 ஹெக்டேர் பரப்பில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் 4 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் அகற்றப்பட்டு, ஏலம் மூலம் அவை விற்கப்பட்டுள்ளது. மேலும், 168 ஹெக்டேர் பரப்பில் நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- வனத்துறை மற்ற வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, அதுகுறித்து அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும். நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல் மொத்தமாக அகற்ற வேண்டும். இதுதொடர்பான டெண்டர் நடைமுறைகளை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். அடுத்த விசாரணையின்போது இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அறிக்கை

சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அனைத்து பஞ்சாயத்து தலைவர்களுக்கும், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அகற்றப்பட்ட சீமை கருவேல மரங்களை ஏலம் மூலம் விற்க பஞ்சாயத்துகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

சீமை கருவேல மரங்களை அகற்றியபின் அந்த இடங்களில் நாட்டு மரங்களை நடவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments