3வது நாளாக வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூர்.. மின்வெட்டு, குடிநீர் சப்ளை பாதிப்பு.. அவதியில் மக்கள்







பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெங்களூர் நகரம் 3வது நாளாக வெள்ளத்தில் மிதக்கிறது. பல இடங்களில் மின்வெட்டு மற்றும் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி பெய்து வருகிறது.
ஜூலை மாதத்தில் கனமழை கொட்டியது.

இதனால் அங்குள்ள நீர் நிலைகள் நிரம்பின. இந்த நிலையில் இந்த மாதாத்தின் தொடக்கத்திலும் பருவமழை தீவிரம் அடைந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.

கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், பெங்களூர்வில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக ஒரு நாள் இரவில் 130 மிமீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால், நகரின் முக்கிய சந்திப்புகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நகரின் முக்கிய பகுதிகள், சாலைகளில் முழங்காலுக்கு மேல் தண்ணீர் ஓடுகிறது. குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்றும் பரவலாக மழை பெய்ததால் பெங்களூர்வின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. நகரின் முக்கிய பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால், தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் பலர் அலுவலகம் சென்றதை காண முடிந்தது.

நகரின் பல முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல இடங்களில் தண்னீர் புகுந்துள்ளதால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சில இடங்களில் குடிநீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அவசர நிலையை சமாளிக்க ரூ 300 கோடியை வழங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 430 வீடுகள் முழுமையாக மூழ்கியுள்ளது. மேலும் 2,188 வீடுகளில் பாதி அளவு தண்ணீர் புகுந்துள்ளது. இதேபோல் சுமார் 225 கி.மீ சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும் பாலங்கள், கால்வாய் மதகுகளும் மழை வெள்ளத்தால் சேதமைடைந்துள்ளன. எனவே அதிகளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதலாக ரூ300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. என்று அவர் தெரிவித்தார்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments