ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கிறது.

அரசு அலுவலகங்கள் என்றாலே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தோற்றமே முதலில் நமது எண்ணத்திற்கு வரும். அதிகரிக்கும் மக்கள் தொகை, மக்கள்தொகைக்கு ஏற்ப அலுவலர்கள் இல்லாதது, போதிய அளவில் கணிணிமயமாக்கலை கையாளாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு பின்னால் இருக்கின்றன. அதிலும், ஆர்டிஓ அலுவலகங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. காலை முதல் மாலை வரை மக்கள் தலைகளால் ஆர்டி ஓ அலுவலகங்கள் நிரம்பி இருக்கும்.

ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, வாகனங்களுக்கான தரச் சான்று (எஃப்.சி.), ஆர்சி புக் உள்ளிட்டவற்றை வாங்க ஆர்டிஓ அலுவலகங்களுக்கு மக்கள் தினமும் படையெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். மேலும், இந்த சேவைகளை பெற இங்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அலுவலகங்களுக்கு செல்பவர்களாக இருந்தால், ஒரு நாள் விடுப்பு எடுக்காமல் ஆர்டிஓ அலுவலகத்தில் வேலையை முடிக்க முடியாது என்ற நிலையை நிலவுகிறது

இந்நிலையில், மக்களின் இந்த அவஸ்தையை புரிந்துகொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதற்காக www.parivahan.gov.in என்ற வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புகைப்படம் மாற்றம், கையொப்பம் மாற்றம், நடத்துநர் உரிமம், வாகனப் பதிவு, சர்வதேச ஓட்டுநர் உரிமம் உள்பட 58 சேவைகளை ஆன்லைன் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்கான கட்டணங்களையும் ஆன்லைன் முறையிலேயே செலுத்திக் கொள்ள முடியும்.

ஆதார் எண் உள்ளவர்கள் அதனைப் பயன்படுத்தி இந்த சேவையை ஆன்லைன் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில், ஆதார் எண் இல்லாதவர்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று மட்டுமே இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் சேவை காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு இனி மக்கள் நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை. மேலும், இந்த நடவடிக்கையால் மக்களின் நேரம் மிச்சமாவதுடன், ஆர்டிஓ அலுவலர்களின் சுமையும் குறையும் என்று சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments