திருச்சியில், முதியவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.14½ லட்சம் அபேஸ் செய்த நைஜீரியாவை சேர்ந்தவர் கைது! சைபர் கிரைம் போலீசார் அதிரடி!!திருச்சியில், முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.14½ லட்சத்தை அபேஸ் செய்த நைஜீரியாவை சேர்ந்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

குறுந்தகவல்

திருச்சி மாவட்டம், காட்டூர் கணேஷ் நகர், பிரதான தெருவில் வசித்து வருபவர் முத்து இருளப்பன் (வயது 61). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக வருமான வரியை முறையாக செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த மாதம் மின்னஞ்சல் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், அவர் கடந்தாண்டு செலுத்திய வருமான வரியில் திரும்பப்பெற வேண்டிய நிலுவை தொகையை பெறுவதற்கு அந்த மின்னஞ்சலில் உள்ள குறுந்தகவலை கிளிக் செய்து நிலுவைத்தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ரூ.14½ லட்சம் அபேஸ்

இதையடுத்து முத்து இருளப்பன் அந்த லிங்கின் மூலம் உள்ளே சென்றபோது, வருமான வரித்துறை போன்ற போலியான இணையதள பக்கத்திற்குள் சென்றுள்ளது. இதையடுத்து அந்த பக்கத்தில் தனது பான் கார்டு, வங்கியின் விவரங்கள் உள்ளிட்டவைகளை அவர் பதிவேற்றம் செய்துள்ளார். பின்னர், அவரது செல்போன் எண்ணிற்கு வந்த ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ததாக தெரிகிறது.

பின்னர் கடந்த மாதம் 24-ந்தேதி தன்னுடைய வங்கி கிரெடிட் கார்டு மூலம் பஸ் டிக்கெட்டுக்கு பதிவு செய்துள்ளார். அப்போது வங்கியில் இருந்து போதிய பணம் இருப்பு இல்லை என்று குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் திருவெறும்பூரில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று பார்த்தபோது, அவரது கணக்கில் இருந்த ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம நபர் திருடியது தெரியவந்தது.

நைஜீரியாவை சேர்ந்தவர் கைது

இது குறித்து அவர் திருச்சி மாவட்ட சைபர் குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக பெங்களூருவில் வசித்து வரும் நைஜீரியா நாட்டை சேர்ந்த பெங்காகி ஒகோமா (41) என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments