“இறைவன்” சொத்து.. இயலாதோருக்கு “இலவச” உணவளிக்கும் அதிராம்பட்டினம் உணவகம்! ஏழையின் பசியாற்றும் தாவூத்




அதிராம்பட்டினத்தில் உணவகம் நடத்தி வரும் தாவூத் என்ற நபர் தனது உணவகத்துக்கு வரும் ஏழைகள், பணம் இல்லாதவர்களுக்கு இலவச உணவு வழங்கி உதவி வருகிறார்.

வேலை, வருமானம், செலவு, ஆடம்பரம், திருமணம், சாதி, மதம், இனம், போட்டி, பொறாமை, மோதல், பகை, துரோகம் என உலகம் வேறொரு திசையில் சுழன்று கொண்டிருப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இங்கு நல்லவர்களுக்கு இடமில்லை, இது நல்லவர்களுக்கான காலமில்லை என புலம்பும் நபர்களிடம் இதுமட்டும் உலகமில்லை நாங்களும் இதே உலகில்தான் இருக்கிறோம் என்பதை அவ்வப்போது சிலர் காட்டி விடுகின்றனர்.

தாவூத் ஹோட்டல்
அப்படிப்பட்ட ஒருவர்தான் தாவூத். தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள பெரிய கடைத் தெருவில் ஹோட்டல் அல் மதினா என்ற பெயரில் சிறிய உணவகம் ஒன்றை இவர் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். பகல் நேரத்தில் பிரியாணி, இரவு நேரத்தில் பரோட்டா. இதுவே இவரது உணவகத்தின் சிம்பிளான மெனு.

சுவையான உணவு
ஆனால், நியாயமான விலையில் சுவையான தரமான உணவை வழங்கி வருவதால் அதிராம்பட்டினம் மக்கள் இவரது உணவகத்தை தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர். கடையில் அமர்ந்து சாப்பிடுவோரைவிட பார்சலிலேயே இங்கு அதிகளவிலான மக்கள் உணவை வாங்கிச் செல்கின்றனர்.


இலவச உணவு
எப்போதும் பிஸியாகவே இருக்கும் தனது உணவகத்தின் மூலம் பலரும் செய்யத் தயங்கும் மகத்தான சேவையை தாவூத் செய்து வருகிறார். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். அதற்கேற்ப தனது உணவகத்தில் "சாப்பாடு வாங்க முடியாதவர்கள் இலவசமாகவே சாப்பிட்டுக் கொள்ளட்டும். இது இறைவனின் சொத்து." என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார் தாவூத்.

பசிபோக்கும் மனிதர்
எத்தனை மதங்கள் இவ்வுலகில் இருக்கிறதோ அத்தனை மதங்களும் தர்மத்தையும், ஏழைகளுக்கு உணவளிப்பதையும் வலியுறுத்துகின்றன. அந்த அளப்பறிய சேவையை தாவூத் செய்து வருகிறார். இதன் மூலம் பணம் இல்லாமல் பசியோடு இருக்கும் ஏழைகள் சிலர் தினமும் இவரது உணவகத்துக்கு வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.

நன்மை கிடைக்கிறது
இது குறித்து தாவூத் அவர்களிடம் நாம் விசாரித்தபோது, "ஏழைகள் சாப்பிடுவதால் நமக்கு நன்மைதான் கிடைக்கிறது. இயலாதவர்கள் யார் என்று தெரிந்து அவர்களுக்கு இலவச உணவை கொடுக்கிறோம். ஏழைகள் இங்கு வந்து சாப்பிட்டு செல்கிறார்கள்." என்று அலட்டிக்கொள்ளாமலும், இதை பெருமை என கருதாமலும் எளிமையாக கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments