திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.




வாகனங்கள் நிறுத்தும் இடங்கள்

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல ரெயில் சேவை உள்ளது. வட மாநிலங்களுக்கும் தினமும் திருச்சி வழியாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில்களில் பயணம் செய்ய ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு தினமும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் திருச்சி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில் ரெயில்களில் வெளியூர் செல்வதற்காக வருபவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்திவிட்டு செல்வதற்காக ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் 2 இருசக்கர வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் ஒரு கார் நிறுத்தும் இடம் உள்ளது.

கூடுதல் கட்டணம்

இங்கு திருச்சியில் இருந்து தினமும் ரெயில் மூலம் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரெயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தங்களில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதற்காக 12 மணி நேரத்திற்கு ரூ.10-ம், 24 மணி நேரத்திற்கு ரூ.20-ம் வசூல் செய்கின்றனர். மேலும் அங்கு நிறுத்தப்படும் கார்களுக்கு சாதாரண கட்டணம் மற்றும் பிரீமியம் கட்டணம் என 2 விதமான கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.

கார் நிறுத்துவதற்கான கட்டணத்தில் 5 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ரூ.25-ம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.50-ம் வசூல் செய்கின்றனர். இதில் பயணிகளை வழியனுப்ப வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த அதிக கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும் கட்டணத்தை குறைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய கட்டணம் வேண்டும்

இது குறித்து ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் நாகராஜ் கூறுகையில், எனது மனைவி வெளியூரில் வேலை செய்து வருகிறார். அவரை தினமும் நான் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ரெயில் நிலையம் வந்து, பின்னர் அவர் பணி முடிந்து திரும்பி வரும்போது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். இதற்காக ரெயில் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ரெயில் நிலையத்திற்கு வந்து விடுகிறேன். இதனால் எனது வாகனத்தை வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தும்போது, அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள். இதனால் ரெயில் நிலையத்திற்கு வெளியே வாகனத்தை நிறுத்தும் நிலை உள்ளது. நான் ரெயில்வேயில் பணிபுரியும்போது இதுபோல் எந்த கட்டுப்பாடும் இல்லை. தற்போது வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே பழைய கட்டணத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்றார்.

டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் கிருஷ்ணகுமார் கூறுகையில், விமான நிலையத்தில் உள்ளது போன்று இந்த ரெயில் நிலையத்தில் வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்யும் நிலை உள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாங்கள் எங்களது உறவினர்கள், நண்பர்களை அழைத்து வர 5 முதல் 10 நிமிடங்கள் ஆகும். இதற்காக வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்தினால் குறைந்தது ரூ.20 வரை வசூல் செய்கிறார்கள். பொதுவாக ரெயிலில் பயணம் செய்பவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தான். அவர்களுக்கு இந்த வாகன நிறுத்த கட்டணம் அதிகமாகவே உள்ளது. முன்பு இருந்ததுபோல் ரூ.10 வசூல் செய்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்றார்.

வாகனங்கள் திருட்டு

டாக்சி டிரைவர் ஸ்ரீதர் கூறுகையில், திருச்சி ரெயில் நிலையத்தில் தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருச்சி ரெயில்வே கோட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுமக்கள் தங்கள் உறவினர்களை அழைத்து வர அவர்களது வாகனங்களை ரெயில் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றனர். சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனை நோட்டமிடும் மர்ம நபர்கள் வாகனங்களை திருடிச் செல்கின்றனர். தற்போது ரெயில் நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது, என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments