வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு




அறந்தாங்கி அருகே பரமந்தூரில் வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி மனு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். வழக்கமாக திங்கட்கிழமைகளில் மனு கொடுக்க பொதுமக்கள் கூட்டம் வருகை சற்று அதிகமாக காணப்படும். இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆயுதபூஜையை கொண்டாட பொதுமக்கள் நேற்று தயாரானதால் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு பொதுமக்கள் வருகை சற்று குறைந்திருந்தது. இருப்பினும் சிலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். இதில் அறந்தாங்கி அருகே பரமந்தூர் கிராமத்தில் வெள்ளாற்றில் குவாரி அமைத்து மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிதம்பரம் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டன. 

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையின் சார்பில், மனந்திருந்தி வாழும் முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கான மறுவாழ்வு நிதியின்கீழ், பெட்டிக்கடை வைப்பதற்கான நிதி உதவித்தொகை தலா ரூ.30 ஆயிரம் வீதம் 2 பேருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பிலான காசோலையினையும், திருவேங்கைவாசலை சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிக்கு, ரூ.2 ஆயிரத்து 500 மதிப்புடைய புதிய ஊன்றுகோலையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments