புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணி போலீசார் விவரம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் ‘திடீர்’ நிறுத்தம்




        புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

இரவு ரோந்து பணி

தமிழக காவல்துறையில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை பட்டியலிட்டு அதனை முகநூலில் பதிவேற்றம் செய்வது, வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பகிர்வது இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த பணி நடைபெற்று வந்தது. தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர் வரை மற்றும் இரவு நேர நிலைய காவலர் விவரம் வரை இதில் இடம்பெற்றது. மேலும் அவர்களது செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேநேரத்தில் காவல்துறையினருக்கும் பெரும் உதவியாக இருந்தது. ஒரு இடத்தில் இரவு ரோந்து அதிகாரி என்பதை எளிதாக தெரிந்து அவர்களை தொடர்பு கொள்ள முடிந்தது. மேலும் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் பெரும் உதவியாக இருந்தது.

தற்காலிகமாக நிறுத்தம்

இந்த நிலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் விவரங்களை முகநூலில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்-அப் குரூப்களில் பகிரப்படுவது இல்லை. இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்ட போது, இந்த பதிவேற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இரவு ரோந்து பணி போலீசார் விவரங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் முகநூல், வாட்ஸ்-அப்பில் தகவல் பரிமாற்றம் செய்யப்படுகிற நிலையில் இத்தகவல் உபயோகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments