புதுக்கோட்டை வியாபாரி வீட்டில் கொள்ளை வழக்கு: 2 வாலிபர் கைது; 47 பவுன் நகைகள்- ரூ.1¼ லட்சம் மீட்பு




புதுக்கோட்டையில்  வியாபாரி வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 47 பவுன் நகைகள் மற்றும் ரூ.1¼ லட்சம் மீட்கப்பட்டது.

நகை-பணம் கொள்ளை

புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராஜலெட்சுமி. இவரது மகன் செந்தில்குமார். ராஜலெட்சுமி புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் பெருமாள் கோவில் மார்க்கெட்டில் தக்காளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமாரும், தனது தாயுடன் சேர்ந்து தக்காளி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வியாபாரத்திற்கு ராஜலட்சுமி அவரது மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சென்றனர். இந்நிலையில் செந்தில்குமாரின் மகன் வெற்றிவேல் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதையடுத்து வெற்றிவேல், செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்குவந்த செந்தில்குமார் மற்றும் வெற்றிவேல் இருவரும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் அறையில் இருந்த 3 பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 48¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


2 பேர் கைது

இதுகுறித்து புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியை சேர்ந்த பெருமாள் மகன் சசிகுமார் (வயது 36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சசிகுமாரும், அவரது நண்பரான அடப்பன்வயலை சேர்ந்த அப்துல்லா மகன் அஷ்ரப் அலி (33) ஆகிய இருவரும் சேர்ந்து ராஜலெட்சுமி வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து நகைகள் மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 47 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 400-ஐ கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட 2 பேரையும், புதுக்கோட்டையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கொள்ளையர்கள் சிக்கியது எப்படி

சசிகுமாரும், ஆஷ்ரப் அலியும் டிரைவர்கள். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. மேலும், தக்காளி வியாபாரம் செய்து வரும் செந்தில்குமாருக்கும், வியாபாரத்திற்காக வாகனம் ஓட்டுவதில் சசிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில், செந்தில்குமாரின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகுமாரும், ஆஷ்ரப் அலியும் நகை-பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சம்பவத்தன்று சசிகுமார் அந்த பகுதியில் இருந்ததற்காக தகவல் கிடைத்ததன் பேரில், அவரை சந்ேதகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் சேர்ந்து நகை-பணத்தை கொள்ளையடித்து தெரியவந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments