ஸ்டைலா, கெத்தா! துபாயில் இருந்து பெங்களூரு வந்து இறங்கிய உலகின் பெரிய விமானம் எமிரேட்ஸ் ஏர்பஸ் (ஏ380)
உலகிலேயே மிகப் பெரிய பயணிகள் விமானம் ஏர்பஸ் ஏ380 ஆகும். இந்த விமானத்தை ஏமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்குகிறது. இந்த விமானம் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள கேம்பகௌடா சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.14) அன்று வந்து இறங்கியது.

முன்னதாக, இந்த விமானம் அக்டோபர் 30ஆம் தேதியன்று பெங்களூரு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்பாக இந்த வாரத்திலேயே வந்துவிட்டது. துபாய் நாட்டில் இருந்து புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் சரியாக வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் பெங்களூருவுக்கு வந்தது.
Twitter Embed

உலகின் மாபெரும் விமானம் பத்திரமாக தரையிறங்குவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அதுகுறித்து உடனுக்குடன் டிவிட்டரில் தகவல்களை வெளியிட்டனர்.
விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்ட பதிவில், “ஏமிரேட்ஸ் ஏர்பஸ் ஏ380 விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அக்.14 ஆம் தேதி வர இருக்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விமானத்தை வரவேற்க எங்களது குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர நடமுறைகளை விமான இயக்க குழுவினர் பரிசோதனை செய்து வருகின்றனர். அந்ந்த மாபெரும் நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கிய நிலையில், அதுகுறித்த வீடியோவையும் டிவிட்டரில் விமான நிலைய அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர். அந்த பதிவில், “எப்படி ஒரு உள்நுழைவு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது பாருங்கள்! உலகின் மாபெரும் பயணிகள் விமானமான எமிரேட்ஸ் ஏ380 பெங்களூரு விமான நிலையத்திற்கு தரையிறங்கியுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

பயண விவரம்

அக்டோபர் 14ஆம் தேதி காலை 10.11 மணியளவில் துபாய் நாட்டில் இருந்து எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டது. சுமார் 3 மணி நேரம் 52 நிமிட பயணத்திற்குப் பிறகு அந்த விமானம் பெங்களூரு வந்து இறங்கியது. மொத்தம் 1,701 மைல்கள் பயணம் நடைபெற்றது. மீண்டும் பெங்களூருவில் இருந்து துபாய்க்கு புறப்பட்டுச் செல்ல இருக்கிறது.

விமானத்தின் சிறப்பம்சங்கள்

எமிரேட்ஸ் விமானம் 72.7 மீட்டர் நீளம் கொண்டது. சுமார் 510 முதல் 575 டன் அளவு எடை கொண்டதாகும். 24.1 மீட்டர் அளவு உயரம் உடையது. விமானங்களை தயாரிக்கும் ஏர்பஸ் நிறுவனமானது, இந்த பெரிய விமானத்தை எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்த பிறகு, இந்த அளவுக்கு பெரிய விமானம் எதையும் தயாரிக்கவில்லை.

உலகில் பயன்பாட்டில் உள்ள எண்ணற்ற விமானங்களில் இந்த விமானமே மிகப் பெரியதாகும். பொதுவாக பெரிய விமானமாக கருதப்படும் போயிங் 777 விமானத்தைக் காட்டிலும் ஏர்பஸ் விமானத்தில் 45 சதவீத இடவசதி கூடுதலாக இருக்கிறது. ஒவ்வொரு வகுப்பு பயண அறைகளில் மாபெரும் ஸ்கிரீன் வசதி உள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments