தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த இலங்கையை சேர்ந்த 6 அகதிகள் மீட்பு

தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே மணல் திட்டில் தவித்த இலங்கையை சேர்ந்த 6 பேரை இந்திய கடலோர காவல் படை மீட்டது.

6 அகதிகள் மீட்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் வாழ முடியாமல் பல்வேறு கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். அது போல் இதுவரையிலும் தமிழகத்திற்கு 176 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் ராமேசுவரம், தனுஷ்கோடி அரிச்சல்முனை அருகே உள்ள 1-வது மணல் திட்டில் அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் மூலம் கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மூலம் அங்கு விரைந்து சென்று மணல் திட்டில் தவித்துக் கொண்டிருந்த 3 ஆண்கள், 3 பெண்கள் என 6 பேரையும் கப்பலில் ஏற்றி தனுஷ்கோடி அரிச்சல்முனை அழைத்து வந்து, ராமேசுவரம் கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து அகதிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர். 6 பேரிடமும், கடலோர போலீசார் மற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இலங்கை மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த அந்தோணி அன்ட்ரனிடிலக்சன் (வயது 24), இவரது மனைவி சனுஜியா (20), இதேபோல் தலைமன்னார் பகுதியை சேர்ந்த சசிகுமார் (47), இவரது மனைவி அந்தோணியாள் பெர்னாண்டோ (42), மகன் அன்டன் சனுஜன் (21) இலங்கை முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த அந்தோணி மரியகொரட்டி (67) என 6 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதுவரை 182 பேர்

இந்த 6 பேரிடமும் தனித்தனியாக நடத்திய விசாரணையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாகவும், அங்கு வேலை வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தமிழகத்தில் உள்ள உறவினர்களோடு சேர்ந்து வாழ தப்பி வந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும் தலைமன்னார் பகுதியில் இருந்து படகில் வருவதற்கு 6 பேருக்கும் சேர்த்து இலங்கைப்பணம் ரூ.2 லட்சம் படகோட்டிக்கு கொடுத்ததாகவும், நள்ளிரவு 2 மணிக்கு கடற்கரை மணல் பரப்பு பகுதியில் எங்களை இறக்கிவிட்டு படகோட்டிகள் திரும்பி சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று வந்த 6 பேருடன் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு மொத்தம் 182 பேர் அகதிகளாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments