‘நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப்படிப்பை தேர்வு செய்த புதுக்கோட்டை மாற்றுத்திறனாளி மாணவி ‘சாதிக்க உயரம் ஒரு தடையில்லை’ என பேட்டி
நீட் தேர்வில் வெற்றி பெற்று புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி மருத்துவப் படிப்பை தேர்வு செய்து இருக்கிறார். சாதிக்க உயரம் ஒரு தடையில்லை என்று அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவி

மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், விளையாட்டு மாணவர்கள் என சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நேரடியாக நடந்தது. மாற்றுத்திறனாளிகள் பிரிவை பொறுத்தவரையில், 212 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருந்த நிலையில், 49 மாணவ-மாணவிகளே விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரையும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 46 பேர் இடங்களை தேர்வு செய்தனர்.

அந்த 46 பேரில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கீழாநிலைக்கோட்டையை சேர்ந்த நவதாரணி என்ற மாணவி, எந்தவித பயிற்சி மையத்துக்கும் சென்று படிக்காமல், சுயமாக படித்து ‘நீட்' தேர்வில் வெற்றி பெற்று, 102 மதிப்பெண் பெற்றதோடு, கலந்தாய்வில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை தேர்வு செய்து இருக்கிறார். உடல் வளர்ச்சி குறைவான நிலையில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இந்த மாணவிக்கு இந்த இடம் கிடைத்து இருக்கிறது.

சாதிக்க உயரம் தடையில்லை

சாதாரண குடும்பத்தில் பிறந்த நவதாரணியின் தந்தை டிரைவராக உள்ளார். தந்தை, தாயாரின் பாசம், அரவணைப்பு, ஊக்கம் ஆகியவற்றினால் மருத்துவ படிப்பு கனவை நிஜமாக்கி இருக்கிறார். படிப்பில் மட்டும் கெட்டிக்காரியாக இல்லாமல், விளையாட்டு, கலை என பல்துறைகளிலும் வல்லவராகவும் இவர் திகழ்கிறார். மாநில அளவில் விளையாட்டு போட்டியில் பங்கு பெற்று சாதித்தும் இருக்கிறார்.

இதுதொடர்பாக மாணவி நவதாரணியிடம் கேட்டபோது, ‘உண்மையிலேயே நான் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இருக்கிறேன். சிறுவயதில் இருந்தே மருத்துவ படிப்புதான் என் முதன்மை விருப்பம். அதனை இப்போது சாத்தியம் ஆக்கி இருக்கிறேன். இதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் என் பெற்றோர்தான். சிறுவயதில் என்னுடைய உடல் வளர்ச்சி குறித்து கேலி செய்வார்கள். அப்போது வருந்தினேன்.

நாளடைவில் அதை மறந்து, சாதிக்க நினைத்தேன். இப்போது அதற்கான புள்ளியை வைத்துவிட்டேன். சாதிக்க உயரம் ஒரு தடையில்லை. மருத்துவம் படித்து முடித்து, மக்களுக்கு சேவை செய்வேன். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நான் இருப்பேன்' என்றார்.

நன்றி : தினத்தந்தி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments