ஒரு சதவீத வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி: டெல்லியை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
ஒரு சதவீத வட்டியில் கடன் தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த பெண் உள்பட 5 பேரை புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

செல்போனில் குறுந்தகவல்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பால்ராஜின் மகன் கனிக்குமார். மீனவர். இவரது செல்போன் எண்ணிற்கு, ஒரு சதவீத வட்டியில் தனிநபர் கடன் தருவதாக ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த செல்போன் எண்ணை கனிக்குமார் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கடன் கேட்டிருக்கிறார். அவரிடம் மறுமுனையில் பேசிய நபர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் என்று கூறி கனிக்குமாரின் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றை வாட்ஸ்-அப் மூலம் பெற்றுள்ளனர்.

தொடர்ந்து கடன் தொகையை வழங்குவதற்காக வரைவோலை எடுக்க கட்டணம் உள்பட பல்வேறு கட்டணம் என ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்து 100 வரை வங்கி மூலம் அவர்கள் கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு கனிக்குமார் பல்வேறு தவணைகளாக அனுப்பியிருக்கிறார். ஆனால் கடன் தொகையை வழங்காமல் அவர்கள் இருந்துள்ளனர்.

5 பேர் கைது

இது தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் கனிக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கனிக்குமாரிடம் பேசிய செல்போன் எண்கள் மற்றும் வங்கி கணக்கு எண்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் விசாரித்தனர். மேலும் தொழில்நுட்ப ரீதியாக போலீசார் விசாரித்தனர். இதில் மோசடியில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் புதுடெல்லியை சேர்ந்த ரகுபதி (வயது 30), முகமது எஸ்தாக் (24), முகமது சாபி ஆலம் (43), பாலாஜி (25), பிரியா (36) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினி, 22 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், ஏ.டி.எம். கார்டு, கணக்குகள் பதிவு செய்யப்பட்ட நோட்டுகள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்கிருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். மேலும் அவர்களை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டெல்லி சென்று மோசடி கும்பலை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட போலீசாரை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழர்களை குறி வைத்து மோசடி
மோசடி கும்பலில் கைதான ரகுபதியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையாகும். பாலாஜியின் சொந்த ஊர் ஈரோடு. இவர்களது குடும்பத்தினர் டெல்லி சென்று வாழ்க்கை நடத்திய நிலையில் இவர்கள் அங்கேயே படித்து வளர்ந்துள்ளனர். பிரியா கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், அவரது கணவர் தேவாவின் ஊர் தேனி ஆகும். மற்ற 2 பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு கும்பலாக செயல்பட்டு தமிழர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தமிழர்களிடம் பேசுவதற்காக ரகுபதி, பாலாஜி, பிரியா ஆகியோரை பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவது போல பேசி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

Pudukottai District Police முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்
தனிநபர்களுக்கு கடன் தருவதாக கூறி போன் மூலம்  ரூ.2,03,100/- ஏமாற்றிய நபர்களை  டெல்லிக்கு சென்று புதுக்கோட்டை  மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரால் 5 பேர் கைது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கோட்டைபட்டினத்தை சேர்ந்த பால்ராஜ் என்பவரது மகன் கனிக்குமார் கடந்த 02-07-22 அன்று 1% வட்டியில் தனிநபர் கடன் தருவதாக தனக்கு SMS வந்ததாகவும் அன்றே அதிலிருந்த 7509100763 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசி அவர்களிடம் தனக்கு ரூ.5,00,000/- கடன் வேண்டும் என்று கூறிய பிறகு 8964033940. 8964049091 ஆகிய எண்களிலிருந்து தொடர்பு கொண்டு வாதியிடம் பேசியதாகவும். மீண்டும் தனலட்சுமி பைனான்ஸில் இருந்து பேசுவதாக 7089759101, 8527396634, 9650921807 என்ற எண்களிலிருந்து வாதியிடம் பேசி ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் போட்டோ போன்ற ஆவணங்களை அவரது வாட்ஸ்அப் எண்-7509100763 ற்கு அனுப்ப சொன்னதன் அடிப்படையில் அனுப்பியதாகவும். 

பின்பு அவர்கள் வாதியை தொடர்பு கொண்டு Document charge, Insurance லோன் Amount, வாதியின் கணக்கில் வரவு வைக்க DD எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு காரணங்களை கூறி பணம் கட்ட சொன்னதால் வாதி அவர்கள் கொடுத்த வங்கி கணக்குகளுக்கு இதுவரை மொத்தம் ரூ.2,03,100/- தொகை அனுப்பி ஏமாந்துவிட்டதாகவும் நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப.,அவர்களின் உத்தரவுப்படியும். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ்கிருஷ்ணன் , சைபர் கிரைம் பிரிவு அவர்களின் வழிநடத்துதலின் படியும், காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் காவல் நிலையம் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் மொபைல் எண்களை ஆய்வு செய்து தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் எதிரிகள் டெல்லியை சேர்ந்த ரகுபதி, முகமது எஸ்தாக், முகமது சாபி ஆலம், பாலாஜி மற்றும் பிரியா ஆகியோர்கள் மேற்படி குற்ற வழக்கில் ஈடுபட்டிருந்ததும் மேலும், இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பலரை டெல்லியிலிருந்து கொண்டு ஏமாற்றிவருவதும் தெரியவந்தது. 

மேற்படி குற்றவாளிகள் சைபர் குற்ற பிரிவு போலீசாரால் டெல்லியில் 15.10.2022ஆம் தேதியன்று அதிரடியாக கைது செய்யப்பட்டு தக்க வழிக்காவலுடன் நிலையத்தில் அறிக்கை செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். டெல்லிக்கு சென்று எதிரிகளை கைது செய்த தனிப்படை சைபர் கிரைம் காவல்துறையினரின் பணியினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக வரவழைத்து  சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்கள்.

என்றும் மக்கள் நலனிற்கும் பாதுகாப்பிற்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments