234 எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்




தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இ-சேவை மையம்

தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களில் இ-சேவை மையங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த மையங்களுக்கான நவீன கம்ப்யூட்டர்கள் வழங்கிடும் அடையாளமாக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், கு.செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி, ம.சிந்தனை செல்வன், சதன் திருமலைக்குமார், எம்.எச்.ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன் ஆகிய 9 எம்.எல்.ஏ.க்களுக்கு கம்ப்யூட்டர்களையும், பயனர் எண் மற்றும் கடவுச் சொல்லையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இ-சேவை மையத்தை தொடங்கிடும் வகையில் முதல்-அமைச்சரும், கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மு.க ஸ்டாலினிடம் நவீன கம்ப்யூட்டர், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமை செயல் அலுவலர் பிரவீன் நாயர், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments