நவம்பர் 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினம்: அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
நவம்பர் 1-ந்தேதியன்று உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

விழிப்புணர்வு

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஷ் அகமது அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நவம்பர் 1-ந்தேதியன்று உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில், அந்த ஊராட்சியினால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டங்களில் ஏதாவது ஒரு ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள், பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.

பாராட்டு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகளை நடத்தலாம். அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுக்கான குறும்படங்களை காட்சிப்படுத்த வேண்டும்.

கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சேர்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கிராம சபையில் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

சிறப்பாக செயலாற்றிய, பூர்வாங்க பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளை பாதுகாத்து, அந்த ஊராட்சியின் வருவாயை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சித் தலைவர்களை கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கருத்து பட்டறைகளை நவம்பர் முதல் வாரத்தில் நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments