200 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை: புதுக்கோட்டையில் புதிய அபராத விதிப்பு அமலுக்கு வருவது எப்போது?




புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி ஆகிய இடங்களில் போக்குவரத்து காவல் நிலையங்கள் மூலமும், மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் மூலமும் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராத தொகை புதுக்கோட்டை மாவட்டத்தில் எப்போது அமலுக்கு வருகிறது என்பது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே கூறுகையில், ‘‘எங்களுக்கு இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. உத்தரவு வந்ததும் நடைமுறைப்படுத்தப்படும். போக்குவரத்து விதி மீறலுக்கு அபராத தொகை உயர்வு தான் விபத்துகளை குறைக்கும்’’ என்றார்.


மேலும், புதிய அபராதம் குறித்து புதுக்கோட்டை நகர போக்குவரத்து போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மரிய சாத்தோ திலகராஜ் கூறுகையில், ‘‘மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கவும், குறைக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். சாலைகளில் அதிவேகமாக இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்வதை தடுக்க ஆங்காங்கே இரும்பு தடுப்புகள், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விபத்துகளை தடுக்க சிக்னல் விளக்குகள், பிரதி ஒலிப்பான் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதி மீறலுக்கான புதிய அபராதம் விதிப்பு தொடர்பாக தற்போது வரை எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. சென்னையில் 28-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. எங்களுக்கு உத்தரவு வந்ததும் புதிய முறைப்படி அபராதம் விதிக்கப்படும். அநேகமாக தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு அமலுக்கு வரும் என தெரிகிறது. எதுவாக இருந்தாலும் உயர் அதிகாரிகளின் உத்தரவு வந்ததும் நாங்கள் செயல்படுவோம். புதிய அபராத தொகை குறித்து ஸ்வைப் மிஷினில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த பதிவேற்றம் முடிந்ததும் அமலுக்கு வரலாம். இதற்கு முன்பு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய உத்தரவில் ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றால் ரூ.500 அபராதம் இருந்தை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டினால் தற்போது ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் அபராத தொகை ஸ்வைப் மிஷினில் ஏ.டி.எம். கார்டு மூலம் வசூலிக்கப்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு மட்டும் உடனடி அபராதமாக பணம் வசூலித்து ரசீது வழங்கப்படும். சிலர் கையில் பணம் இல்லை என்றால் ஆன்லைன் மூலம் பணம் கட்டுவார்கள். இது தான் தற்போதைய நடைமுறையில் உள்ளது. 18 வயதிற்குட்பட்டவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் அவரது பெற்றோர் தந்தை அல்லது தாய்க்கு சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல புதிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது. அபராத தொகை அதிகரித்ததின் மூலம் பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும். இதன்மூலம் விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை நகரப்பகுதியில் விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் 200 இடங்களில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக தனியாரின் பங்களிப்பு மூலம் ஏற்பாடு நடந்து வருகிறது’’ என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments