மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் அருகே பட்டாசு வெடிக்க கூடாது மாவட்ட நிர்வாகம் அறிவுரை
மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

பட்டாசுகள் விற்பனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு விற்பனையகங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். விற்பனை செய்யப்படும் பட்டாசுகளும் அரசால் அனுமதிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும் அனுமதி பெற்ற கட்டிடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்வதை வணிகர்கள், விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கட்டிடங்களுக்கு வெளியே மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் பட்டாசுகளை மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் எளிதில் தீ பிடிக்கும் இடங்கள் ஆகியவற்றின் அருகே வெடிக்கக் கூடாது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

அரசினால் அறிவுறுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பிற நபர்களை அச்சுறுத்தும் விதமாகவும், அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும் பட்டாசு வெடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல் விலங்குகளுக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லாத வகையில் வெடிப்பதை உறுதி செய்திட வேண்டும்.

அதிக சத்தம் உண்டாக்கும் தடைசெய்யப்பட்ட வெடியினை விற்பனை செய்யக்கூடாது, பயன்படுத்தக்கூடாது. பொதுமக்கள் நமது சுற்றுச்சூழலின் மாசு, பாதிப்பு உண்டாக்கும் வெடிகளை பயன்படுத்தக்கூடாது. மாசில்லா மற்றும் விபத்தில்லா பாதுகாப்புடன் கூடிய தீபாவளி என்பதை உறுதிபடுத்தும் விதமாக செயல்படுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments