அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, காய்கறிகள் விற்பனையை அதிகரிக்க திட்டம்: 10 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பொலிவு பெறும் உழவர் சந்தைகள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், காய்கறிகள் விற்பனையை அதிகரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

உழவர் சந்தை

முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து சந்தையில் விற்கும் வகையில் உழவர் சந்தை எனும் திட்டத்தை தொடங்கினார்.

இதில் விவசாயிகளுக்கு கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கடைகளுக்கு வாடகை கிடையாது. இலவசமாக தராசுகள் வழங்கப்படுகின்றன. இலவச மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

6 இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, விராலிமலை, ஆலங்குடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டையில் அமைந்துள்ள உழவர் சந்தை நகரின் மையப்பகுதியில் உள்ளதால் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் வந்து வியாபாரம் செய்கின்றனர். இதில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளன. கழிப்பறை வசதியும், குடிநீர் வசதியும் உள்ளது. விவசாயிகள் அமைத்துள்ள கடைகளில் மேற்கூரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல சிமெண்டு தள பாதை அமைக்கப்பட்டுள்ளது.



காய்கறிகளின் விலை விவரம் டிஜிட்டல் பலகையில் தெரியும் படி ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் கடைகளின் தரைத்தளத்தை உயர்த்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். வீணாகும் மற்றும் அழுகும் காய்கறிகளில் இருந்து உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை உழவர் சந்தையின் முகப்பு பகுதியின் அருகே வீணாகும் காய்கறிகள், குப்பைகள் கொட்டப்படும் இடம் சுகாதார கேடாக உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேம்படுத்த திட்டம்

உழவர் சந்தைகளை பெரிய அளவில் மேம்படுத்த நடவடிக்கை எதுவும் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு உழவர் சந்தைகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் உழவர்சந்தைகளில் அடிப்படை வசதிகளை தற்போது இருக்கும் நிலையில் இருந்து மேம்படுத்தி காய்கறிகள் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உழவர் சந்தைகள் புதுப்பொலிவுடன் மாற உள்ளது. உழவர் சந்தைகள் பற்றி பொதுமக்கள், விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

விலை குறைவு

மோகனசுந்தரம் கூறுகையில், ‘‘நான் உழவர் சந்தையில் தொடர்ந்து காய்கறிகள் வாங்கி வருகிறேன். இங்கு காய்கறிகள் நல்ல முறையில் உள்ளது. மேலும் வெளி மார்க்கெட்டில் உள்ள விலையை விட சற்று குறைவாக தான் இருக்கிறது. இதேபோல சில நேரங்களில் காய்கறிகளின் விலை கடுமையாக உயரும்போது கூட உழவர்சந்தையில் விலை சற்று குறைவாக தான் இருக்கும். அனைத்து விதமான காய்கறிகளும் இங்கு கிடைக்கிறது. காய்கறிகள் பசுமையாக இருக்கும். அன்றாடம் தேவையான அளவை வாங்கி கொள்வேன்’’ என்றார்.

இயற்கை விவசாயம்

விவசாயி செல்வகுமார்:- ‘‘நான் எனது தோட்டத்தில் விளையும் கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய், சுண்டைக்காய், தேங்காய் ஆகியவற்றை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறேன். இதுதவிர தக்காளி உள்பட சில காய்கறிகளையும் வாங்கி விற்கிறேன். இங்கு உழவர் சந்தை ஆரம்பித்த காலத்தில் இருந்தே எனது அம்மா வியாபாரம் செய்து வந்தார்கள். அதன்பின் கடந்த 11 ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்கிறேன். இதில் நல்ல வியாபாரம் நடக்கிறது.

ஒரு சில நாட்கள் காய்கறிகள் கொஞ்சம் மீதியானால் அவற்றை வெளியில் விற்றுவிடுவேன். வீணாகி போகும் காய்கறிகளை இங்கேயே ஓரமாக கொட்டிவிடுவது உண்டு. ஒரு முறை என்னிடம் கத்தரிக்காய் வாங்கி சென்ற நபர் வீட்டில் பயன்படுத்திய பின் அந்தமானுக்கு மொத்தமாக கத்தரிக்காய் தேவைப்படுவதாக கூறினார். அதனால் அவ்வப்போது 300 கிலோ வரை அந்தமானுக்கு இங்கிருந்து கத்தரிக்காய் செல்கிறது. அவர்களாகவே வண்டியில் வந்து தோட்டத்தில் இருந்து கொண்டு செல்வார்கள். இயற்கை முறையில் விளைவிக்கப்படும் கத்தரிக்காய் என்பதால் அதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. நான் செய்யும் விவசாயம் இயற்கை முறை சார்ந்ததாகும். அதனால் வாடிக்கையாளர்களும் எனது கடையில் காய்கறிகள் அதிகம் வாங்குவார்கள்’’ என்றார்.

நல்ல முறையில் வியாபாரம் நடக்கிறது

விவசாயி பூமயில்:- ‘‘முதலில் கீரைகளை தோட்டத்தில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்தேன். அதன்பின் காய்கறிகள் விளைவித்து உழவர்சந்தைக்கு கொண்டு வருகிறேன். ஒரு சில காய்கறிகளை வெளியில் வாங்கி வந்தும் விற்பனை செய்வேன். இங்கு நல்ல முறையில் வியாபாரம் நடக்கிறது. பண்டிகை நாட்கள், விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு சில நாட்கள் வியாபாரம் மந்தமாக இருக்கும். கட்டுப்படியாகிற விலையில் விற்பதால் பெரிய அளவில் நஷ்டம் இல்லை. காய்கறிகள் விற்பனையாகாத நாட்களில் விடுதிகள், ஓட்டல்கள் உள்பட தேவைப்படுகிறவர்களுக்கு கொண்டு சென்று விற்பது உண்டு’’ என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments