வடகிழக்கு பருவமழையின் போது மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்சார வாரிய அதிகாரி விளக்கம்
இலுப்பூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அக்னிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவ மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றை தொடாதீர்கள். மழையாலும், பெருங்காற்றாலும் மின்சாரக் கம்பிகள் அறுந்து கிடந்தால் அதைத் தொடாதீர்கள், யாரையும் தொட விடாதீர்கள், மின் வாரிய அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள். மின் கம்பத்திலோ அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால் நடைகளை கட்டாதீர்கள். மின் கம்பங்களிலோ அல்லது மின்பாதைக்கு அருகிலோ விளம்பரப் பலகைகளை கட்டாதீர்கள். மின் வாரியத்தின் மின்சாரக்கம்பிகளில் மழையின் காரணமாக மரக்கிளைகள் ஏதேனும் விழுந்து விட்டால் அதனை தன்னிச்சையாக அகற்ற முற்படாதீர்கள் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவியுங்கள்.

 மேல்நிலை மின்கம்பியின் உயரத்தை தொடுமளவிற்கு ஏணி, ஈரக்கட்டை மற்றும் இரும்புக்கம்பிகள் கட்டுமானப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்லுதல் கூடாது. மேல்நிலை மின் கம்பிகள் செல்லும் இடங்களில் கட்டுமான மற்றும் இதர பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ, லாரி போன்ற வாகனங்களை நிறுத்தவோ கூடாது. மின் வேலைகளை தரமற்ற மின் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடாது.

 மின் வாரியத்தின் உரிய அனுமதியில்லாமல் வேறு கட்டிடங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லக் கூடாது. ஈரக்கைகளால் மின் சாதனங்களை இயக்கக் கூடாது. முத்திரை பதிக்கப்பட்ட மின் பொருட்களை சான்றளிக்கப்பட்ட எலக்டரீசியன் மூலமே பொருத்த வேண்டும். வீட்டில் வயரிங் செய்வதற்கு தரமான வயர்களை உபயோகிக்க வேண்டும் பழுதான பழைய வயர்களை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. கட்டுமானப் பணிகளின் போது மொசைக், டைல்ஸ் போடுதல், பாலீஸ் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்போது வயர்கள் ஈரம் படாமல் கவனமாக கையாளப்பட வேண்டும். மெயின் ஸ்விட்சு ஆப் செய்யாமல் எந்த புதிய மின் வயரிங் வேலைகள் செய்யக்கூடாது. இன்சுலேஷன் இல்லாத மின்சார வயர்கள் மற்றும் அறுந்து மற்றும் பழுதடைந்த மின் வயர்களை ஒட்டுப்போட்டு உபயோகிக்கக் கூடாது. மேலும் விபரங்களுக்கு​9445854266, 9445853908 இந்த செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments