மழையளவு குறைந்து வருகிறது: தைல மரங்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
மழையளவு குறைந்து வருவதால் தைல மரங்களை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

தைல மரங்கள் ஆக்கிரமிப்பு

அன்னிய நாட்டு மரமாக பார்க்கப்படும் தைல மரங்கள் தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அரசு மற்றும் தனியார் மூலமாக, அதிக அளவில் லட்சக்கணக்கான ஏக்கர் இடப்பரப்பில் உள்ளது. இதன் மூலம் உரிய மழை இன்றி விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருவதோடு, அரசு வனக்காடுகள் அனைத்தும் தைல மரங்களே ஆக்கிரமித்து உள்ளது.

பருவ மழை கூட தவறி பெய்யும்

இதனால் உரிய வனக்காடுகள் இன்றி வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் தண்ணீர் மற்றும் உணவு தேடி சென்ற மயில், மான், நரி, குரங்கு, முயல் போன்ற பறவை மற்றும் விலங்குகள் ஆங்காங்கே உள்ள விவசாய நிலங்களில் தஞ்சம் புகுந்த வண்ணம் இருந்து வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தைல மரங்களே அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பருவ மழை கூட பருவம் தவறி பெய்யும் சூழல் நிலவி வருவதாகவும் விவசாயிகள் வருத்தப்பட்டு வருகின்றனர்.

உரிய வனக்காடுகள் இன்றி விவசாய தோட்டங்களில் சுற்றித்திரியும் மான்களை படத்தில் காணலாம்.

இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விபரம் வருமாறு:-

மழையளவு கூட குறைந்தது

கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கவாஸ்கர் கூறுகையில், முதலில் அரசு இடங்களில் உள்ள தைல மரங்களை அரசு முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் தனியார் இடங்களில் உள்ள தைல மரங்களை அகற்றுவதற்கு சிறந்த முன் உதாரணமாக இருக்க முடியும். தைல மரங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புற பகுதிகளில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு கூட வெகுவாக குறைந்து வருகிறது. வனப்பகுதிகள் மூலமாக, முன்பெல்லாம் கனமழையால் ஒவ்வொரு ஆண்டும் வனப்பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருந்த காட்டாற்று தண்ணீர் கூட தற்சமயம் 12 முதல் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரக்கூடிய அளவிற்கு தான் தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் எண்ணற்ற விவசாயிகள் விவசாய இடங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்றார்.

அரசுக்கு வருவாய்

லெட்சுமணன் கூறுகையில், தைல மரங்களை முற்றிலும் அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய மரங்களை நட்டு வளர்ப் பதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் வருவதோடு, உரிய வனக்காடுகள் உருவாக்கும் சூழலும் அமைய வாய்ப்புண்டு என்றார்.

பல்லுயிர் காடுகள் உற்பத்திக்கு...

வடகாடு பகுதியை சேர்ந்த ராசேந்திரன் கூறுகையில், தைல மரங்களை நடவு செய்ய நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் வெட்ட வெட்ட வளர்ந்து வரும் தைல மரங்களை முற்றிலும் அடியோடு அகற்றி விட்டு புதிய பல்லுயிர் வன காடுகளை உருவாக்கினால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் மட்டுமின்றி பறவை விலங்குகளுக்கு கூட உரிய வன இல்லம் அமைய ஏதுவாக இருக்கும். தைல மரங்களை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய பல்லுயிர் காடுகள் உற்பத்திக்கு அரசு துணை நிற்க வேண்டும். இல்லையேல் பறவை மற்றும் விலங்குகள் உரிய வன இல்லம் இல்லாமல் போவதோடு உரிய மழை இன்றி விவசாயிகள் விளை நிலங்களை பறிகொடுக்கும் சூழல் அதிக அளவில் நடை பெற வாய்ப்பு உள்ளது என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments