இன்று உலக நகரங்கள் தினம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தர மேம்பாடு முதலிய செயல்பாடுகளுக்கு அடிப்படை மூலமாக நகரங்கள் செயல்பட்டு வருகின்றன. நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் என்ற நிலைப்பாட்டினைப் போல, இப்போது நாட்டின் பரிணாம வளர்ச்்சி என்பது நகரங்களை நோக்கியே என்கிற நிலை உருவாகியுள்ளது.நகர்ந்து கொண்டே இருக்கும் வாழ்க்கையை நிறைவூட்டும் வகையில் நகரங்களின் அணிவகுப்பு பெருகிக் கொண்டே இருக்கிறது.‌ திக்குமுக்காட வைக்கும் கட்டிடங்களும், திகைப்பூட்டும் வடிவங்களும் ஒருசேர காண்பவரின் கண்களை பிரம்மிக்க வைக்கும் விருந்தாக அமைகிறது நகரங்களின் வரவேற்பு. தொழில்முறை வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு பரிமாற்றத்திற்கும் நகரங்கள் ஓர் சாராம்சமாக திகழ்ந்து வருகிறது. தொழில் முனைவோர்களை ஈர்க்கும் வண்ணம் போக்குவரத்து வசதிகள், நில அமைப்பு, அரசின் பங்களிப்பு ஆகிய அடிப்படை கூறுகள் தடையின்றி கிடைக்கும் பன்முகத்தன்மை வாய்ந்த பங்குநிலையமாக காட்சியளிக்கின்றன.


        மக்களின் ஈர்ப்பை பெற்ற தொழிற்சாலைகளின் பெருக்கம் மற்றும் தொலைத்தொடர்பு வசதியானது அவர்களை தொழில்முறை சார்ந்த வளர்ச்சியில் பங்கெடுக்க வைப்பதோடு, தகவல் தொலைத்தொடர்பில் அவர்களுக்கான முன்னேற்ற பாதையை உருவாக்கித் தரும் ஒரு மேடையாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு எதிர்கால தலைமுறையினருக்கான புதுமைகள் நிறைந்த சிறந்ததொரு வாழ்வினை அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுப்பதையும், அதிலுள்ள சிரமங்களை அகற்றும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அன்று அக்டோபர் மாதம் 31-ந் தேதியை உலக நகரங்கள் தினமாக ஐ.நா சபை அறிவித்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 31-ந்் தேதி வெவ்வேறு விதமான தலைப்புகளுடன் நகரமயமாதலை ஊக்குவிப்பதோடு, நகரங்களை மேம்படுத்தும் திட்டங்களை அனைத்து நாடுகளும் செயல்படுத்தி வருகின்றன.

நகரமயமாதலின் போது ஏற்படும் முக்கிய பிரச்சினைகளான மாசு கட்டுப்பாடு, கழிவுநீர் மேலாண்மை, சுத்தமான குடிநீர் வழங்குதல் உள்ளிட்டவற்றை முழுமையாக களைய மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து இந்நாளில் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு மக்களின் வாழ்வியல் முறைகளையும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துக்்கின்ற பணியினை நகரங்களின் வளர்ச்சிக்கான வியூகங்கள் செய்து வருகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நகரங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அதனை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் சிட்டி, தூய்மை இந்தியா, தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் முதலிய திட்டங்களை நமது நாடு செயல்படுத்தி வருகிறது. கிராமங்களில் அன்றாட உணவிற்கு கஷ்டபட்டு உழைத்து களைத்த மனிதர்களையும், அடுக்குமாடி கட்டிடங்களில் அமர வைத்து அழகு பார்ப்பதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர வைத்த நகரங்களின் வளர்ச்சிப்பாதைக்கு நாம் பங்களிப்பதோடு, நமது முன்னேற்றத்திற்கும் நகரங்களை பயன்படுத்திக்கொள்ள இந்நாளில் இருந்து உறுதிபட செயல்படுவோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments