‘வீட்டு உபயோக பூச்சிக்கொல்லி மருந்து விற்க உரிமம் அவசியம்’ - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் அவசியம் எனவும், உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி விஷம், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகள் ஆகியவற்றை விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்படுவது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி குற்றமாகும்.

வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைக் கடைகளில் விற்கவும் உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்குத் தேவையான உரிமத்தினைப் பெறத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.500/- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7500/- செலுத்தியும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.100/- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1500/- செலுத்தியும் உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.

உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்மீது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் பேரங்காடிகளின் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடுகளையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பற்பசை வடிவில் விற்பனை செய்யப்படும் ரேட்டால் எனப்படும் 3 சத மஞ்சள் பாஸ்பரஸ் கொண்ட எலிக்கொல்லி விஷம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை விற்பனையாளர்கள் விற்பனை செய்யக்கூடாது, ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது எனவும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களை தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments