புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள்-மேலாண்மை இயக்குனர் தகவல்




        புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும் மிஷன் இயக்குனர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட கோவில்பட்டியில் 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியையும், புதிதாக தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கப்படவுள்ள திருவப்பூர் அருகே உள்ள இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் நார்த்தாமலை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 15-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய் இணைப்பின் மூலம் குடிநீர் வழங்கி செயல்படுத்தப்பட்ட பணியையும் ஆய்வு செய்தார். 

கூட்டுக்குடிநீர் திட்டம்

 முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். ஆய்வு தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 39 திட்டங்களின் மூலம் 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகள், 4,062 ஊரக குடியிருப்புகளை சேர்ந்த 17 லட்சத்து 10 ஆயிரத்து 63 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் 70.877 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தற்போது நாள்தோறும் சுமார் 61.487 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதுக்கோட்டை நகராட்சியில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப நாள்தோறும் தேவைப்படும் 40 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், மணல்மேடு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் ரூ.670 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை நகராட்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களை சீர்ப்படுத்தும் வகையில் ரூ.75.06 கோடி மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குடியிருப்புகளுக்கு குடிநீர்

 அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையார்கோவில், புதுக்கோட்டை, மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 754 ஊரகக்குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.756.56 கோடி மதிப்பீட்டிலும், விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், பொன்னமராவதி, திருமயம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 1,094 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ரூ.550.43 கோடி மதிப்பீட்டிலும் மூன்றாம் நபர் கலந்தாலோசகர் மூலம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மொத்தம் ரூ.2,052.05 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதாபிரியா, மேற்பார்வை பொறியாளர் மாதவன், நகராட்சி ஆணையர் நாகராஜன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments