புதுக்கோட்டை அருகே லாரியில் சிக்கிய இளைஞர்! கீழே விழுந்த கண்ணாடியை எடுக்க பைக்கை திருப்பிய போது நேர்ந்த சோகம்
திருமயம் அருகே உள்ள அரசம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் விழுந்த மூக்கு கண்ணாடியை எடுக்க திரும்பியதால் லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், பின்புறம் வந்த இருசக்கர வாகனமும் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை காவேரி நகரை சேர்ந்தவர் குமார். இவர் தனது நண்பர் சந்துருவுடன் இருசக்கர வாகனத்தில் திருமயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரசம்பட்டி என்ற இடத்தில் சென்ற போது வாகனத்தை ஓட்டிச் சென்ற குமாரின் மூக்கு கண்ணாடி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூக்குக் கண்ணாடியை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தை உடனே குமார் திருப்பிய போது திருவோணத்திலிருந்து செங்கோட்டை நோக்கி மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்ற குமார் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான லாரி திடீரென நின்றநிலையில் லாரியின் பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் லாரியின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த திருமயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் உயிரிழந்த சந்துருவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த குமார் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறி சாலையில் விழுந்த மூக்கு கண்ணாடியை எடுப்பதற்கு பின்னால் வரும் லாரியை கவனிக்காமல் உடனே இருசக்கர வாகனத்தை திருப்பியதால் இந்த விபத்து நடந்ததாக விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments