புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது: புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு விரைவில் தொடக்கம்
புதுக்கோட்டையில் பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது. புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

பழைய அரசு மருத்துவமனை

புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் கடந்த 1871-ம் ஆண்டு நகர பொது மருத்துவமனை கட்டப்பட்டது. அதன்பின் கடந்த 1974-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டு இயங்கி வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் மச்சுவாடி அருகே அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. அதன்பின் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனால் பழைய அரசு மருத்துவமனை செயல்படாமல் இருந்து வந்தது. இந்த கட்டிடங்களில் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் இயங்க தொடங்கின. இந்த நிலையில் விபத்து உள்பட அவசர சிகிச்சைக்காக சிகிச்சை பெறுவதற்கு நகரின் மையப்பகுதியில் இருந்து அதிக தூரம் செல்ல வேண்டி உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் இதே கோரிக்கை தொடர்பாக போராட்டங்களை நடத்தினர்.

புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு

இந்த நிலையில் புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட தொடங்கும் என சமீபத்தில் புதுக்கோட்டை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பழைய அரசு மருத்துவமனை மீண்டும் இயங்குவதற்காக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதற்கட்டமாக புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. விரைவில் இச்சிகிச்சை பிரிவு தொடங்குகிறது. அதன்பின் படிப்படியாக தேவைக்கேற்ப கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும் என மருத்துவ துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வரவேற்பு

மருத்துவமனையை முழுமையாக மீண்டும் செயல்படுத்த வேண்டுமானால் அதற்கேற்ப மருத்துவர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். சிகிச்சைக்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்கு அரசின் தரப்பில் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது. தற்போது புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்க உள்ளது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments