டெல்டா கிழக்கு பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்து முத்துப்பேட்டை , கொரடாச்சேரி , நன்னிலம் , கீழ்வேளூர் ரெயில் மறியல்


டெல்டா கிழக்கு பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

டெல்டா கிழக்கு பகுதிகள் புறக்கணிப்பு

திருவாரூர்-காரைக்குடி ரெயில் பாதையில் நிரந்தர கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். திருவாரூரில் அனைத்து ரெயில்களுக்கான பணிமனை அமைக்க வேண்டும். மன்னார்குடி-கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் நீடாமங்கலத்தில் மாற்றுவதால் கேட் மூடப்பட்டு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து என்ஜினை மாற்ற வேண்டும்.

கொரடாச்சேரி, கீழ்வேளூர், முத்துப்பேட்டை, பேரளம் ஆகிய இடங்களில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்டா கிழக்கு பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரெயில்வேயை கண்டித்தும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட அமைப்பினர் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை செல்வராஜ் எம்.பி. ஒருங்கிணைத்தார்.

பேச்சுவார்த்தை கூட்டம்

இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் ரெயில்வே அதிகாரிகள் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து என்ஜினை மாற்ற வேண்டும். கொரடாச்சேரி, கீழ்வேளூர், முத்துப்பேட்டை, பேரளம் ஆகிய இடங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்ல வேண்டும் என போராட்டக்குழுவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கூட்டத்தில் எந்தவித உடன்பாடு ஏற்படவில்லை.

ரெயில் மறியல் போராட்டம்

இதனை தொடர்ந்து நேற்று திருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, பேரளம், முத்துப்பேட்டை ஆகிய 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. கொரடாச்சேரி கிளரியம் ரெயில்வே கேட் அருகில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் ரெயிலை மறிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாக மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்ததால் அந்த ரெயிலை மறித்து பின்னர் விடுவித்தனர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

பின்னர் எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக காத்திருந்தனர். அந்த ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவியது. அப்போது திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர், செல்வராஜ் எம்.பி.யை போனில் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து செல்வராஜ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்னரக ரெயில்வே அதிகாரி அளித்த வாக்குறுதியினை ஏற்றும், அரசு அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த தொடர் ரெயில் மறியல் போராட்டம் என்பது அடையாள ரெயில் மறியல் போராட்டமாக பதிவு செய்து, இ்ந்த போராட்டம் என்பது தற்காலிகாக ஒத்திவைக்கப்படுகிறது. உரிய கால அவகாசத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த போராட்டம் நடைபெறும் என்றார்.

எம்.பி., எம்.எல்.ஏ. உள்பட 500 பேர் கைது

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் மற்றும் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் துரைவேலன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்திரன், கலியபெருமாள், தேவா, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் கலைவேந்தன், பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி இடிமுரசு, தமிழ்செல்வன் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தொழிற்சங்கங்கள், மாதர் சங்கம், இளைஞர்-மாணவர்கள் அமைப்பினர், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட செல்வராஜ் எம்.பி., பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்பட 500 பேரை கைது செய்தனர். இந்த ரெயில் மறியல் போராட்டம் 3 மணி நேரம் நடந்தது.

எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

ரெயில் மறியல் போராட்டம் குறித்து அறிவிப்பு முன்கூட்டியே வெளியிடப்பட்ட நிலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் உரிய உடன்பாடு ஏற்படவில்லை.

எம்.பி., எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகளின் போராட்டம் என்பதால், நிச்சயம் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை ரெயில் நிலையத்திலே நிறுத்தப்பட்டது. காரைக்கால் செல்வதற்கான பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொட்டும் மழையில் போராட்டம்

கடந்த 2 வாரங்களாக பருவ மழை சற்று ஒய்வெடுத்த நிலையில் நேற்று மழைக்கான சூழ்நிலை நிலவியது. கொரடாச்சேரி கிளரியம் பகுதியில் ரெயில் மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது.

மழையில் நனைந்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.

நன்னிலம், முத்துப்பேட்டை

நன்னிலம் அருகே சன்னிநல்லூர் ெரயில் நிலையத்தில் திருவாரூர்- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை கம்யூனிஸ்டு கட்சியினர் மறித்து ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ. வி. நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முத்துப்பேட்டை ெரயில் நிலையத்தில் மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் ெரயில் மறியல் போரட்டம் நடைபெற்றது. அப்போது திருவாரூரிலிருந்து காரைக்குடிக்கு சென்ற பாசஞ்சர் ெரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழ்வேளூர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையத்துக்கு தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் திரண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட ரெயில் வருகைக்காக காத்திருந்தனர். பகல் 12 மணி வரை ரெயில் வராத காரணத்தால் போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. மழையில் நனைந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், வர்த்தகர் சங்கம், ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.போலீசார் குவிப்பு

போராட்டம் காரணமாக கீழ்வேளூர் ரெயில் நிலையத்தில் நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறை வாகனம், வஜ்ரா வாகனம், உள்ளிட்டவை அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments