இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்களை விடுவிக்கக்கோரி ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். படகுகளை விடுவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 மீனவர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் சென்ற 4 மீனவர்களையும் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 விசைப்படகையும் பறிமுதல் செய்து, அதில் சென்ற 24 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மீனவர்கள் குடும்பத்தினர் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை விடுத்து வந்தனர்.
இன்று முதல் வேலைநிறுத்தம்
இதற்கிடையே ஜெகதாப்பட்டினம் மீனவ சங்கத்தில், சங்க நிர்வாகிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்களையும், அவர்கள் சென்ற 5 விசைப்படகையும் விடுவிக்க வேண்டும். மேலும், 24 மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) முதல் காலை வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இலங்கை அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அனைத்து மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகளையும் அழைத்து ஆலோசனை செய்து மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். மீனவ சங்க நிர்வாகிகள் வேலைநிறுத்த அறிவிப்பால் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
3 படகுகளையும் பறிமுதல் செய்தனர்
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கூறிய கருத்துகள் வருமாறு:-
விசைப்படகு உரிமையாளர் வாசு:- என்னுடைய விசைப்படகில் எங்கள் பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்களுடன் சேர்ந்து 24 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு என்னுடைய விசைப்படகில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது விசைப்படகை பறிமுதல் செய்து, மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்தனர். விசைப்படகை விடுவிக்கவில்லை. பின்னர் மற்றொரு விசைப்படகு வாங்கி தொழிலுக்கு சென்று கொண்டிருந்தேன்.
இதேபோல் 2020-ம் ஆண்டும் மீன்பிடிக்க சென்ற போது விசைப்படகை பறிமுதல் செய்து, மீனவர்களை விடுவித்தனர். அப்போதும் விசைப்படகை திருப்பி தரவில்லை. பின்னர் எங்களுடைய தங்க நகைகளை விற்றும், வட்டிக்கு ரூ.25 லட்சம் பெற்று புதிதாக படகை வாங்கி ெதாழில் செய்து வருகிறேன். தற்போது இலங்கை கடற்படையினர் 24 மீனவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்த சம்பவம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது என்னுடைய 3 படகுகளும் இலங்கையில் உள்ளது. அதன் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும். 3 படகுகளையும் பறி கொடுத்துவிட்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்து வருகிறேன். எனவே என்னுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
தாங்க முடியவில்லை
கைது செய்யப்பட்ட மாதவன் என்பவரது தந்தை குமார்:- நான் மிகவும் சிரமப்பட்டு இந்த விசைப்படகை பல லட்ச ரூபாய் கடன் வாங்கி வாங்கினேன். இந்த படகில் எனது மகன் மாதவன் எனது தம்பி வீரமணி, மச்சான் தாமரைச்செல்வம் மற்றும் 2 பேர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தற்போது, அவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் எங்களால் தாங்க முடியவில்லை.
ஒப்படைக்க வேண்டும்
கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விஜயகுமார்:- இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்கின்றது. இலங்கையில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகுகள் 90-க்கு மேல் உள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசு இலங்கையில் உள்ள தமிழக படகுகளை மீட்டு மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
நடவடிக்கை
ஜெகதாப்பட்டினம் மீனவர் சங்க தலைவர் பாலமுருகன்:- இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற எங்கள் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு 24 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.