மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நாளை முதல் தொடக்கம் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்




புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் திருத்தப்பணி நாளை (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2023-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களது பெயர் புகைப்படத்துடன் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? எனவும், தங்களது பெயர், விபரங்கள் புகைப்படம் ஆகியவை தவறின்றி காணப்படுகிறதா? என்பதையும் சரிபார்த்துக்கொள்ளலாம்.

விண்ணப்ப படிவம்

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்து தங்களது ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, வயது மற்றும் இருப்பிடம் தொடர்பான ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு படிவம் 6 பி, பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 ஆகியவற்றினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

சிறப்பு முகாம்கள்

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை நாளை முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந் தேதி வரை மேற்கண்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களிலும் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரமும், மேலும் 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை), 26-ந் தேதி (சனிக்கிழமை) மற்றும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களின் போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அளிக்கலாம்.

மேலும், அனைத்து தாசில்தார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலுவலக நாட்களில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணிவரை படிவங்கள் அளிக்கலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments