புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்த சோகையால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிப்பு இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள விழிப்புணர்வு




புதுக்கோட்டை மாவட்டத்தில் ரத்த சோகை நோயால் பெண்கள், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ரத்த சோகை

நாட்டில் பெண்களுக்கு ரத்த சோகை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பெண்கள், குழந்தைகள் ரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கூறியதாவது:- ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை குறிக்கிறது.

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்கு குறையும். இதனால் உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும்.

இரும்பு சத்து உணவு பொருட்கள்

ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம். மாதவிடாய், மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை அதிகமாக இருக்கிறது. மகப்பேறின்போது தாய் இறப்பது போன்றவற்றை ரத்த சோகையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தவிர்க்க முடியும்.

இரும்பு சத்து குறைவான உணவு, குடற்புழுக்கள் பாதிப்பு, செருப்பு அணியாமல் நடத்தல், தன் சுத்தம் பேணாதல் உள்ளிட்டவற்றால் ரத்தசோகை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இரும்பு சத்து நிறைந்த உணவினை உட்கொள்ள வேண்டும். பேரீச்சம்பழம், கீரை வகைகள், கொண்டக்கடலை, அச்சுவெல்லம் உள்பட பாரம்பரிய உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு

குழந்தைகளுக்கு துரித உணவுகள், ஜங்புட்ஸ் என அழைக்கப்படும் திண்பண்டங்கள், உணவுகளை தவிர்த்திட வேண்டும். அவர்களுக்கு சிறுதானியங்களால் செய்யப்படும் உணவு திண்பண்டங்களை கொடுக்கலாம். இதன்மூலம் ரத்த சோகை பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும்.

ரத்த சோகை உள்ள குழந்தையின் செயல்பாடு குறைவாக இருக்கும். சுறுசுறுப்பு இல்லாமல் கொஞ்சம் மந்தமாக இருப்பார்கள். இதனால் ரத்த சோகை பாதிப்பு குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் பள்ளிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடு, வீடாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments